ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு கோவை மாநகராட்சி கூட்டத்தில் பாஜ அரசை கண்டித்து தீர்மானம்

கோவை : கோவை மாநகராட்சி கவுன்சில் கூட்டம், மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நேற்று நடந்தது. துணை மேயர் வெற்றிசெல்வன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். இதில், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு, தார்ச்சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால், குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளை மேற்கொள்வது தொடர்பாக 333 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவை, தவிர, துணை மேயர் வெற்றிசெல்வன், மேலும் 2 சிறப்பு தீர்மானங்களை கொண்டுவந்தார். அதை, 12-வது வார்டு கவுன்சிலர் ராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூ.) வழிமொழிந்தார். அந்த 2 தீர்மானங்கள் விவரம் வருமாறு: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக அணி தமிழகம்-புதுவையில் 39 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றது.

2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது. அதன்பிறகு, அதே ஆண்டில் (2021) நடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் திமுக அணி சரித்திரம் படைக்கும் வெற்றி பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திமுக அணி, தமிழகம்-புதுவையில் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றிவாகை சூடியது. இப்படி இமாலய வெற்றியை குவித்து வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டம் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது, அந்த நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளிக்கும் வகையில் இருக்க வேண்டும். நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதனின் வாழ்வை மேம்படுத்தும் வகையில், கொள்கை பிரகடனமாகவே அந்த பட்ஜெட் இருக்க வேண்டும். ஆனால், தற்போது ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட், ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை, மாறாக, அரசியல் காரணங்களுக்காக பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.

இது, தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடியது. தமிழகம், சமீபத்தில் சந்தித்த 2 தொடர் பேரிடர் இழப்புகளை சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தியது. ஆனாலும், இந்த வரவு-செலவு திட்டத்தில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ரூ.37,000 கோடி பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்தது.

ஆனால், ஒன்றிய அரசு சுமார் ரூ.276 கோடி மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது. அதுவும் சட்டரீதியாக வழங்கப்பட வேண்டியதுதான். ஆனால், தற்போது உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சல பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பீகார் மாநிலத்திற்கு மட்டும் ரூ.11,500 கோடி பேரிடர் தடுப்பு பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.

இது, தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதியாகும். கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. மொத்தத்தில் தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது, இந்திய நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது. எனவே, நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிக்கப்பட்டதற்கு, கோவை மாநகராட்சி மாமன்றம், ஒன்றிய பாஜ அரசுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய, தடையின்மை சான்று வழங்கலாம் எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 5-வது வார்டு கவுன்சிலர் நவீன்குமார் பேசுகையில், ‘‘ஆன்லைன் மூலமாக 2,500 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட காலிஇடத்தில் 3,500 சதுர அடி வரை கட்டிட அனுமதி பெறுவதற்கு 100 சதவீத கட்டணம் உயர்த்தியுள்ளதை மாற்றி, பழைய நிலையிலேயே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். நடுத்தர மக்களை பாதிக்காத அளவிற்கு கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்.’’ என்றார்.

26-வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளிங்கிரி பேசுகையில், ‘‘விளாங்குறிச்சி ரோடு-அவிநாசி ரோடு சந்திப்பில் நடைபெற்று வரும் அவினாசி ரோடு உயர்மட்ட மேம்பால பணிகளால் பீளமேடு பகுதி வாகன ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்தி சாலை, விளாங்குறிச்சி சாலை, காளப்பட்டி சாலை போன்ற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அதாவது, வி.கே.ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்கள், பயனீர் மில் ரோடு சென்றுதான் திரும்பவேண்டும் என்று வடிவமைத்துள்ளதை மாற்றி அமைக்க வேண்டும்’’ என்றார்.

73-வது வார்டு கவுன்சிலர் சோமு என்கிற சந்தோஷ் பேசுகையில், ‘‘3,500 சதுர அடியில் வீடு மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு ஆன்லைன் மூலம் கட்டிட அனுமதி பெறும் வசதியை அறிமுகப்படுத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோருக்கு நன்றி. கோவையில் அமைய உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும்’’ என்றார்.

63வது வார்டு கவுன்சிலர் சாந்தி முருகன் பேசுகையில், ‘’கோவைக்கு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் வேண்டும் என நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். அதை ஏற்று, தமிழக முதல்வரும், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அதற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் செய்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு கோவையில் சிலை அமைக்க வேண்டும்’’ என்றார். இதன்பின்னர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பேசியதாவது:

மாநகரில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட தார்ச்சாலை, படிப்படியாக சீரமைக்கப்பட்டு வருகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தடுக்கும் வகையில், குப்பை கிடங்கை சுற்றி சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த குப்பை கிடங்கில் தீப்பிடிப்பதை தடுக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகரில் தெருநாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து, குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யும் பணி துரிதமாக நடக்கிறது. உக்கடம் சில்லரை மீன் மார்க்கெட் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விட்டது. அது மிக விரைவில் இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே கூட்டத்தில் 335 தீர்மானம்

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டத்தில், ஒரே நாளில் 335 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இதுவே முதல்முறை ஆகும். ஏனெனில், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் காரணமாக, கடந்த 4 மாதமாக சாதாரண கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் 335 தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

அதிமுக கவுன்சிலர் வாக்குவாதம்

தமிழக அரசு சார்பில் சமீபத்தில் கட்டிட அனுமதி ஆன்லைன் மூலம் வழங்கப்படும் என்ற திட்டம் துவக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், கட்டண உயர்வு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என 47-வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், 333 தீர்மானங்களையும் தனித்தனியாக படித்து விவாதம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு, திமுக கவுன்சிலர்கள் மீனா லோகு, கார்த்திக் செல்வராஜ், முபசீரா, மாலதி, மாரிச்செல்வன் உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை