ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது.. வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கனிமொழி எம்.பி கடும் தாக்கு..!!

தூத்துக்குடி: ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது என திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். ஆர்இசி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் இன்று தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, ஆர்இசி லிமிடெட் இயக்குனர் திருப்பதி நாராயணன், அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி, மேயர் ஜெகன்பெரியசாமி, எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். பின்னர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி. ஒன்றிய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியுள்ளார். அவர் கூறியதாவது;

ஒன்றிய பாஜக அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. ஏனெனில் ஒன்றிய பாஜக அரசே தேசிய பேரிடராகத் தான் உள்ளது. தூத்துக்குடியில் மழை வெள்ளம் வந்தபோதும், முன்கூட்டியே உரிய எச்சரிக்கையை கொடுத்துவிட்டோம் என்று சொன்னார்கள். அதேபோல கேரள நிலச்சரிவுக்கும் கூறுகிறார்கள். இதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் மறுத்திருக்கிறார். அவர்கள் பாதிக்கப்படும் மாநிலங்களக்கு உதவி செய்வதில்லை, மாறாக முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம் என்று கூறி வருகிறார்கள். மேலும், மாநிலங்களுக்கு நிதி தராமல் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக இழுத்தடிக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.

Related posts

பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

மிலாது நபி பண்டிகைக்கான அரசு விடுமுறை செப்.16-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி அறிவித்து தமிழக அரசு உத்தரவு

வறட்சியைத் தாங்கி வளரும் நெல்ரகம் காட்டுயானம்!