வேலையில்லா நெருக்கடிக்கு தீர்வு காண தவறிய மோடி 3.0: காங். விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடியும் அவரது பெருமையை பறைசாற்றும் பொருளாதார வல்லுனர்களும் வேலையின்மை அதிகரிப்பு குறித்த கருத்தை தாக்கி வருகின்றனர். ஆனால் உண்மையில் 2014ம் ஆண்டு முதல் வேலையின்மை அதிகரித்துள்ளது. இந்த நிலையற்ற, நெருக்கடி நிறைந்த அரசானது 100 நாட்களை கொள்கைகளுக்கு எதிரான திருப்பங்களுடன் கடந்தது. பல முறைகேடுகள் மற்றும் தொடர்ச்சியான ஊழல்களுக்கு இடையே நாட்டின் மிகப்பெரிய வேலையின்மை நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசு தவறிவிட்டது. இந்த விவகாரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் எச்சரிக்கை ஒலியை எழுப்பி வருகின்றது.

துக்ளக்கின் பணமதிப்பு நீக்கம் மூலமாக வேலைவாய்ப்பை உருவாக்கும் சிறுகுறு தொழில்களின் அழிவால் ஏற்பட்ட நெருக்கடி ,அரசின் அவசர அவசரமான ஜிஎஸ்டி,திட்டமிடப்படாத கொரோனா ஊரடங்கு மற்றும் சீனாவில் இருந்து அதிகரித்து வரும் இறக்குமதிகள் ஆகியவற்றின் மூலமாக நாட்டில் நெருக்கடிகள் உருவானது. இறுதியாக பயாலஜிக்கல் அல்லாத பிரதமரின் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவான பொருளாதார கொள்கைகளும் முக்கிய காரணமாகும். இந்தியாவின் வேலையின்மை விகிதம் 45ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று உள்ளது. பட்டதாரி இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 42சதவீதமாகும். இந்த நெருக்கடியின் அளவை நிரூபிக்கும் தரவுகள் இன்னும் அதிகம் உள்ளது. இவற்றுள் மிகவும் மோசமான இரண்டு விவகாரங்கள் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க தவறியது மற்றும் முறையான சம்பளத்துடனான வேலைகள் குறைந்தது ஆகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை 2024ல் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 முதல் 80லட்சம் இளைஞர்கள் தொழிலாளர் படையில் சேர்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 2012 முதல் 2019ம் ஆண்டு வரையில் வேலையில் பூஜ்ஜிய வளர்ச்சி அதாவது வெறும் 0.01 சதவீதம் மட்டுமே உள்ளது என தெரிவித்துள்ளது. 2022ம் ஆண்டில் நகர்ப்புற இளைஞர்கள் (17.2சதவீதம்) மற்றும் கிராமப்புற இளைஞர்கள்(10.6சதவீதம்) வேலையின்மை மிக அதிகமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்த யதார்த்தத்தை ஏற்க மறுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவு: பள்ளிக்கல்வித் துறை சார்பில் விரைவில் வழிகாட்டு நெறிமுறை

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி; காங்கிரஸ் ரூ.2,000 அறிவித்த நிலையில் பாஜக ரூ.2,100 அறிவிப்பு..!!

ரெட்டியார்சத்திரம் அருகே 10  மயில்கள் விஷம் வைத்து கொலை?