வேலைவாய்ப்பின்மை வெகுவாக குறைந்துள்ளது இந்தியாவின் விரிவடையும் பொருளாதாரம் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: இந்தியாவின் விரிவடையும் பொருளாதாரம் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.  டெல்லியில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின்கீழ் நேற்று நடைபெற்ற திறன் பட்டமளிப்பு விழா 2023ல் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “திறமைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட பாஜ அரசு அதற்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி, தனியாக நிதி ஒதுக்கியது.

இந்தியா முன்னெப்போதையும்விட இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு அதிக முதலீடுகளை செய்து வருகிறது. இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. வேகமாக மாறிவரும் தேவைகள், பணிகளின் தன்மைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துவது அவசியம். தொழில்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்ப இருக்க வேண்டும். இந்தியாவின் விரிவடையும் பொருளாதாரம் இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

இந்தியாவின் வேலைவாய்ப்பு உருவாக்கம் புதிய உச்சத்தை எட்டி உள்ளது. சமீபத்திய கணக்கெடுப்புகளின்படி இந்தியாவில் வேலையின்மை விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் மிகவும் குறைந்துள்ளது. இந்திய கிராமப்புற, நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை வேகமாக குறைந்து வருகிறது. வளர்ச்சியின் பலன்கள் கிராமம், நகரம் இரண்டையும் சமமாக சென்றடைகிறது. இதனால் கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் புதிய வாய்ப்புகளும் சமமாக அதிகரித்து வருகின்றன” என்று இவ்வாறு பெருமிதத்துடன் கூறினார்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்