மழையின்றி கொளுத்தும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் சரிவு சாத்தான்குளத்தில் கருகும் தென்னை மரங்கள்

*விவசாயிகள் கவலை

சாத்தான்குளம் : சாத்தான்குளம் பகுதியில் மழையின்றி கொளுத்தும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. போதிய தண்ணீரின்றி தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டாரம் வானம் பார்த்த பூமியாக உள்ளது. இங்கு பெரும்பாலான இடங்களில் கிணறு மற்றும் குளத்துநீர் பாசனம் மூலமே விவசாயம் நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பருவமழை முறையாக பெய்யாததால் இப்பகுதி நீர்மட்டம் கடல் மட்டத்துக்கு கீழ் சென்றுவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது கிணறுகளில் இருப்புள்ள தண்ணீரை கொண்டு பயிரிடப்படும் பயிரை விவசாயிகள் காத்து வருகின்றனர். ஒரு சிலர் சொட்டு நீர் பாசனம் அமைத்து விவசாயத்தை கவனித்து வருகின்றனர்.

இந்தாண்டும் தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், தற்போது சாத்தான்குளம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கோடைபோல் வெயில் கொளுத்துவதோடு மழையும் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்துள்ளது. போதிய தண்ணீர் இல்லாததால் தென்னை மரங்களும் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குறிப்பாக சாத்தான்குளம் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் படிப்படியாக கருகி வருகின்றன.

ஒரு சில இடங்களில் தென்னையில் இலை உதிர்ந்த நிலையிலும். பட்ட மரங்கள் போலும் காணப்படுகின்றன. இதனை காப்பாற்ற விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேய்க்குளம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள பனை மரங்களிலும் பனை ஓலைகள் கருகத் துவங்கியுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் தற்போது நடக்கும் விவசாயத்தை எப்படி காப்பாற்றுவது என்று விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

இதுகுறித்து சாத்தான்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில் ‘‘சாத்தான்குளம் பகுதி எப்போதும் வறட்சி பகுதிதான். தற்போது கடும் வெயில் அடித்து வருவதால் தென்னை மரங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் காய தொடங்கியுள்ளது. எப்போதுமே அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். அதுவரை கருகும் நிலையில் உள்ள தென்னை மரங்களையும், இதர மரங்களையும் பாதுகாக்க வேண்டும்.

கருகும் தென்னை மரங்களை பாதுகாக்க மிகுந்த கஷ்டப்பட்டு வருகிறோம். வரும் ஆண்டில் எதிர்பார்த்த மழை பெய்தால் எங்களது விவசாயம் ஓரளவு காப்பாற்றப்படும் என நம்புகிறோம். மாவட்ட கலெக்டர் சாத்தான்குளம், தாலுகா பகுதியை ஆய்வு செய்து வறட்சி பகுதியாக அறிவித்து, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும்’’ என்றார்.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே