அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து,50 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதுப்பித்தல் மாணக்கர்கள் https;//ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஸ்டுடென்ட் லாகின் சென்று ஆதார் எண் அளித்து, இ-கேஓய்சி வெரிபிகேஷன் செய்ய வேண்டும். இதில், ஏதாவது இடர்பாடு ஏற்படும் பட்சத்தில் தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரை ஆதார் எண் நகலுடன் அணுகவும். மேலும், கல்வி உதவித்தொகை இணையதளம் புதுப்பித்தலுக்கு 18.10.2023 (இன்று) முதல் செயல்பட துவங்கும்.
புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்கள் 18.11.2023க்குள் இணைய தளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் அல்லது 94454 77826 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்