உளறல் மாஜி மந்திரியை முக்கிய பொறுப்பிலிருந்து கழற்றிவிட தலைமை கட்டளையிட்டு இருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘அரசு விழாவை புறக்கணிக்குமாறு இலாகா இல்லாத அமைச்சருக்கு புல்லட்சாமி போட்ட கட்டளை தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் பெண் அமைச்சர் பதவி நீக்கத்திற்கு பிறகு காரை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மகனான திருவுக்கு, புல்லட்சாமி அமைச்சர் பதவி கொடுத்தார். தந்தையின் ஆசைப்படி அமைச்சராகி விட்டோம் என்ற பூரிப்பில் மூன்றரை மாதங்களாக மாவட்டம் முழுவதும் இலாகா இல்லாத அமைச்சராக உலா வந்து கொண்டிருக்கிறாராம்.. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில் அவருக்கு இலாகா ஒதுக்கப்படும்னு எதிர்பார்த்தாராம்.. அதன்படி, புல்லட்சாமியும் சில இலாகாக்களை ஒதுக்கி கவர்னருக்கு கோப்பு அனுப்பினாராம்.. ஆனால், கவர்னரோ அந்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்காமல் பரிசீலினையில் வைத்துவிட்டு ஐதராபாத்துக்கு பறந்துவிட்டாராம்..

இதற்கிடையே கலை, பண்பாட்டுத்துறை சார்பில் நடந்த ஒரு விழாவில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் இலாகா இல்லா அமைச்சர் பெயர் அச்சடிக்கப்பட்டிருந்ததாம்.. வேறு எந்த அமைச்சர் பெயரும் அந்த அழைப்பிதழில் இடம்பெறவில்லையாம்.. இதை பார்த்து ஷாக் ஆன புல்லட்சாமி, இலாகாவுக்கு ஒப்புதல் கிடைப்பதற்கு முன்பே திருதான் அந்த துறையோட அமைச்சர் என்பதை உறுதி செய்வதுபோல் அழைப்பிதழ் இருக்கிறதேன்னு யோசித்தாராம்.. உடனே அமைச்சரை தொடர்பு கொண்டு அரசு விழாவுக்கு செல்லாமல் புறக்கணித்து விடுங்கள்னு கூறியிருக்கிறார். அப்போதுதான் உங்களுக்கு என்ன இலாகா ஒதுக்கப்போகிறேன்னு யாருக்குமே தெரியாதுனு கூறினாராம்.. அதன்படி, திருவும் அரசு விழாவை புறக்கணித்துவிட்டு காரைக்காலிலேயே அமர்ந்துவிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உளறல் மாஜி மந்திரியை முக்கிய பொறுப்பிலிருந்து கழற்றிவிட முக்கிய நிர்வாகிகளுக்கு தலைமை கட்டளையிட்டு இருப்பதா டாக் ஓடிக்கிட்டு இருக்காமே…’’ என்ற முதல் கேள்வியுடன் வந்தார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு புகழ் பெற்ற சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக இலைக்கட்சியை சேர்ந்த உளறல் மாஜி மந்திரி இருக்கிறாரு.. இவர் கட்சியின் மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்பையும் வகிக்கிறாரு.. இவரது எம்எல்ஏ அலுவலகம் எப்போதும் பரபரப்பாக, கூட்டமாகத்தான் இருக்கும்.. மனு கொடுக்க வந்த மக்களால் அல்ல… தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டம் என அனைத்தையுமே இங்குதான் தொடர்ந்து நடத்திக்கிட்டு வருகிறாரு உளறல் மாஜி. இத்தனைக்கும் கட்சிக்கென்று தனி அலுவலகம் பூட்டு மாநகரில் இருந்தும், அங்கு இவர் போவதே இல்லையாம்.. எம்எல்ஏ அலுவலகத்திலேயே எல்லாவிதமான டீலிங்கும் முடிகிறதாம்..

இது மனு கொடுக்க வரும் மக்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கி வருகிறதாம்.. எப்போதுமே, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள், கரை வேட்டிகள் என இலைக்கட்சி நிர்வாகிகளே சூழ்ந்துக்கொள்வதால் பொதுமக்கள் ெராம்பவே எரிச்சல் அடைகிறாங்க.. ஏன் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்துவதில்லைனு விசாரித்தபோதுதான் மாவட்டத்தில் இவர் மீதான அதிருப்தி வெளியாகியிருக்கிறது. உளறல் மாஜி தனது ஆதரவாளர்கள் வட்டத்தை கவனிப்பதோடு சரி… மாவட்டத்தில் நான்தான் அந்தக்கால சீனியர் என மார்தட்டிக் கொண்டாலும், பூட்டு மாவட்ட சீனியர்களை இவர் சீண்டுவதே இல்லையாம்.. இதனால் பெரும்பாலானோர் அதிருப்தியில் இருக்காங்களாம்.. மேலும், கட்சி அலுவலகம் வராமல் இருக்கும் தகவலையும், மேலிடத்தில் சிலர் போட்டுக் கொடுத்திருக்காங்க.. இதனால் தலைமை இதுதொடர்பாக தீவிரமாக விசாரித்து, அறிக்கையாக தரும்படி சில மூத்த நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு இருக்காம்.. விரைவில், இவர் முக்கிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படலாம்னு பரபரப்பான டாக் ஓடிக்கிட்டிருக்கு…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டிரைவர், கண்டக்டர்களை பாடாபடுத்தும் டெப்போ அதிகாரி மேல புகார் கொடுக்க போனாக்கூட மிரட்டல்தான் வருதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மருதமலை பஸ் டெப்போவுல இருக்கிற முருகன் பெயர் கொண்ட ஒரு அதிகாரி ரொம்ப அராஜகம் பண்ணிட்டு இருக்காராம்… இவர், நியாயமாக, நேர்மையாக பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்களுக்கு எல்லாம் லீவு தர்றது இல்லையாம்… இவருக்கு வேண்டியவங்க கேட்டால் மட்டும் உடனே லீவு கொடுத்து விடுகிறாராம்.‌.. மத்தவங்க லீவு கேட்டால் இரண்டு டியூட்டி பாருன்னு… தண்டனை கொடுத்துவிடுவாராம்… தனக்கு வேண்டிய சில டிரைவர், கண்டக்டர்களை கைக்குள் போட்டுக்கொண்டு, இஷ்டத்துக்கு ஆட்டம் போடுகிறாராம்.. இங்கே நான்தான் ராஜா… நான் என்ன வேணும்னாலும் செய்வேன்… என்னை யாரும் கேள்வி கேட்க முடியாதுனு தர்பார் வேற செய்கிறாராம்..

இவரது அராஜகம் தாங்க‌ முடியாம சில டிரைவர், கண்டக்டர்கள், கிளை மேலாளர் கிட்ட போய் புகார் செஞ்சிருக்காங்க…, ஆனால், அவரோ, ‘நீங்க அவரு சொல்லறது மட்டும் கேளுங்க… என்கிட்ட வந்து புகார் கொடுக்காதீங்க… இப்படி இனி புகார் கொண்டுவந்தா, வேலையில இருக்க முடியாதுன்னு’ மிரட்டி அனுப்பி விட்டாராம்.. இதனால், அப்பாவி டிரைவர், கண்டக்டர்கள் பலர், என்ன செய்யுறதுனு தெரியாம விழி பிதுங்கிபோய் நிற்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘காக்கிகள் நிலைய பஞ்சாயத்து பெரிய பஞ்சாயத்தா இருக்கும்போலவே..’’ என கடைசியா ஒரு கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல கலசத்துல தொடங்குற ஏரியாவுக்கு பக்கத்துல, பருவத்துல தொடங்குற பெரிய மலை இருக்குது.. இங்க இருக்குற கோயிலுக்கு பவுர்ணமி நாட்கள்ல அதிகமான பக்தருங்க வருவாங்க..

இதுல போன பவுர்ணமிக்கு அதிகமான பக்தருங்க வந்திருக்காங்க.. மலையடிவாரத்துல சந்தேகப்படும்படியாக வந்தவங்க கிட்ட வனத்துறை அதிகாரிங்க சோதனை நடத்தியிருக்காங்க.. அதுல 7 பேர் கிட்ட போதை பொருள் இருந்துச்சாம்.. உடனே அந்த சப்டிவிஷன் 3 ஸ்டார் உயர் அதிகாரிகிட்ட சொல்லியிருக்காங்க.. உடனே அவரு அங்க இருக்குற காக்கி கிட்ட சொல்லி கேஸ் போட சொல்றதுக்கு, 2 ஸ்டார் காக்கியிடம் போன் கொடுக்க சொல்லியிருக்காரு.. ஆனா அந்த 2 ஸ்டார் காக்கி அந்த போனை வாங்கி பேசவே இல்லையாம்.. அப்புறம் நேர்ல வந்த 3 ஸ்டார் காக்கி சம்பந்தப்பட்டவங்க மேல கேஸ் போட்டிருக்காரு.. ‘உயர் அதிகாரி சொல்லியும் கேஸ் போடல. இப்படி இருக்குது கடல்ன்னு தொடங்குற காக்கிகள் நிலைய பஞ்சாயத்து.. பிடிச்சு கொடுத்தும் கேஸ் போட மாட்ேடங்குறாங்கன்னு’ வனத்துறையில இருந்து புலம்பல் சத்தம் வருதாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் தெலங்கானா ஆளுநர் சந்திப்பு

ஷபாலி 205, மந்தனா 149 இந்தியா 525/4