உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு: திருச்செந்தூர் சென்று திரும்பிய நிலையில் சோகம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தில் மோதியதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 14 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள மாம்பாக்கம் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேர் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செவ்வாய்க்கிழமை வேனில் சென்றுள்ளனர். தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தப் பின்னர் வேனில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டு, சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இவர்கள் வந்த வேன் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள மேட்டத்தூர் பகுதியில் புதன்கிழமை அதிகாலை வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையின் இடதுபுறத்திலிருந்த மரத்தின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த திருநாவலூர் காவல்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை ரோந்து மீட்புப் படையினர், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தினர் நிகழ்விடம் விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்கு செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து திருநாவலூர் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க உத்தரவு: நவ.14ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு

புதுக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

ஜம்மு – காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது: மொத்தம் 239 வேட்பாளா்கள் போட்டி