உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

*விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டு தொகை வழங்கவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(30). இவர் கடந்த 2019ம் ஆண்டு வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளார். தொடர்ந்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள்கூறி பலமுறை அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் கர்ப்பமடைந்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்திய போது வினோத் மறுத்துவிட்டு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிருப்தியடைந்த அந்த பெண் ஊர் பஞ்சாயத்தை கூட்டி இது சம்பந்தமாக முறையிட்டுள்ளார். அப்போது வினோத் திருமணத்திற்கு மறுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பண உதவி செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வினோத் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும், ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து சிறைதண்டனை விதிக்கப்பட்ட வினோத் போலீஸ் பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

Related posts

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி