உயர் வருமானம் தரும் உலர் மலர்கள்!

பல்வேறு மலர்ச் செடிகளை சாகுபடி செய்து விவசாயிகள் லாபம் ஈட்டி வருவதை நாம் அறிவோம். அதேபோல உலர் மலர்களை உற்பத்தி செய்தும் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறது இந்தக் கட்டுரை. உலர் மலர்கள் உற்பத்தியா? என புருவம் உயர்த்துகிறீர்களா? இந்தக் கட்டுரையைப் படியுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.உலர் மலர்கள் என்பது மலர்களை அலங்காரத்திற்காக உலர்த்தி பயன்படுத்தும் ஒரு டெக்னிக். இதற்கு மலர்களைத் தவிர செடியின் வேர்கள், இலைகள், பட்டை அல்லது முழு தாவரம் உள்ளிட்டவையும் பயன்படுத்தப்படுகின்றன. உலர் மலர்களை நித்திய மலர்கள் அல்லது நீரிழப்பு மலர்கள் என்றும் அழைக்கிறார்கள். மலர்கள் விரைவில் கெட்டுவிடும் பொருளாக இருப்பதால் இவற்றை நீண்ட நாட்களாக சாதாரண நிலையில் வைத்திருக்க இயலாது. அதனால் அவற்றை நன்கு உலர்த்தி பின்னர் அவற்றிற்கு தேவையான வண்ணங்கள் கொடுத்து அலங்கார மலர்களாக நீண்ட காலத்திற்கு அழகு குறையாமல் சேமித்து வைக்க முடியும்.இவ்வாறு மதிப்புக் கூட்டப்படுவதால் அவற்றின் பொருளாதார மதிப்பு மற்றும் நுகர்வோர் ஈர்ப்பு அதிகரிக்கிறது. உலர் மலர்களின் பொருளாதார முக்கியத்துவம் உலக அளவில் குறிப்பிடத்தகுந்ததாக இருக்கிறது. நவீன யுகத்தில் கொய்மலர்களால் ஆன பூங்கொத்துகள் அன்பிற்கும், பாசத்திற்கும், பரஸ்பர நட்பிற்கும் இணைப்புப் பாலமாக திகழ்கிறது. கொய்மலர்களின் தேவையானது நாளுக்கு நாள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மலர் உற்பத்திக்கு தட்பவெட்ப நிலை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் உள்ள வேறுபாடு காரணமாக மலர் உற்பத்தி, விலை நிர்ணயம், விற்பனை ஆகியவற்றில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுகின்றன. பறித்தவுடன் விற்பனைக்கு வரும் கொய்மலர்களின் அளவும், விற்பனையும் நிலையற்றதாக இருக்கின்றன. அவை போதுமான சேமிப்பு வசதிகள் இன்றி வாடியும் விடுகின்றன. இவற்றை ஈடு செய்யவும், மலர் உற்பத்தித் தொழிலை நிலைப்படுத்தவும், விற்பனை நிலையை நிர்ணயிக்கவும் உலர் மலர்கள் உற்பத்தி பெருமளவில் உதவுகிறது.

உற்பத்தி மற்றும் ஏற்றுமதி

உலர் மலர்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் (ரூ.322 கோடி) இருக்கிறது. மலர்களைத் தவிர இதர தாவரப் பகுதிகள் வனங்களிலிருந்து சேகரிக்கப்படுகின்றன. இந்தியாவில் கொல்கத்தா, கொச்சி, தமிழகத்தின் தூத்துக்குடி, சேலம், திருச்சி ஆகிய இடங்கள் முக்கிய உலர் மலர் உற்பத்தி மையங்களாக விளங்குகின்றன. உலக உலர் மலர் ஏற்றுமதியில் இந்தியா 5 சதவீத பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. உலர் மலர் உற்பத்தித் தொழிலின் வளர்ச்சி இந்தியாவில் ஆண்டுக்கு 15 சதவீத அளவில் இருந்து வருகிறது.நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் வணிக மலர்களில் 60 சதவீதம் உலர் மலர்கள்தான். உலர்த்தப்பட்ட இலை, செடி மற்றும் மலர் பாகங்களும், அவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களாகவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பெருமளவில் உலர்ந்த ரோஜா இதழ்கள் ஏற்றுமதி ஆகின்றன. இந்திய உலர் மலர்த் தொழிலின் மொத்த மதிப்பு ரூ.150 கோடி. இத்தொழிலில் உலர்த்தப்பட்ட மலர்கள், இலைகள், தண்டுகள், காய்கள் போன்றவற்றைக் கொண்டு பாட்பூரி செண்டு வளையம், வாழ்த்து மடல், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இதனை சிறிய அளவில் குடிசைத் தொழிலாகவோ அல்லது தொழிற்சாலை தொழிலாகவோ செய்யலாம். இதனால் உலர் மலர்களுக்கு உள்நாட்டிலும் தேவை அதிகரித்து வருகிறது. பாட்பூரிஸ் என்பது உலர் மலர்த் தொழிலில் ஒரு முக்கிய பிரிவு. இந்தியாவில் மட்டும் இதன் மதிப்பு ரூ.55 கோடி. இந்தத் தொழில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 60 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 2 மாநிலங்களிலும் இத்தொழில் சீராக வளர்ந்து வருகிறது.தமிழ்நாட்டில் அனைத்து விதமான மலர்களை உற்பத்தி செய்வதற்கும், அதன்மூலம் உலர் மலர்கள் ஏற்றுமதியைப் பெருக்கவும் காலநிலை மிக உகந்ததாக இருக்கிறது. இது ஆண்டு முழுவதும் நிச்சயம் கைகொடுக்கும். தமிழ்நாட்டில் 8,300 எக்டேர் பரப்பளவில் மலர்ச் செடிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஐரோப்பிய வகை மலர்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் வளரும் சில உள்நாட்டு வகைகளும் உலர் மலர்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. மண், நீர் உள்ளிட்ட காரணிகளால் வளம் குறைந்த இடங்களிலும், வேளாண்சார் குடிசைத் தொழில்கள் செய்ய இயலாத இடங்களிலும், வேலை வாய்ப்பு குறைந்த இடங்களிலும் உலர் மலர்கள் உற்பத்தியை முன்னெடுக்கலாம். இத்தகைய இடங்களில் உலர் மலர்களுக்கு ஏற்ற தாவர வகைகளை வளர்ப்பதன் மூலம் தொழில் நிறுவனங்கள் வளரவும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் வழிவகுக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்கள் உலர் மலர் உற்பத்தியின் முன்னோடி மாவட்டங்களாக திகழ்கின்றன.

உலர் மலர்கள் உற்பத்திக்கேற்ற மலர்கள் மற்றும் சேகரிப்பு முறைகள்

உலர் மலர் அலங்காரத்திற்கு தாவரத்தின் தண்டு, இலை, காய், பூங்கொத்து, கனி, விதை மற்றும் புற்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக பயன்படுத்தப்படும் மலர்கள் அதிகாலை அல்லது மாலை நேரங்களில் அறுவடை செய்யப்படுவதன் மூலம் பூக்கள் எளிதில் வாடுவதைத் தவிர்க்கலாம். மேலும் உலர் மலர் அலங்காரத்திற்கு மலர்களைத் தேர்வு செய்யும்போது அந்த மலர்கள் குறைந்த ஈரத்தன்மையுடனும், நார்த்தன்மையுடனும் இருத்தல் வேண்டும்.ஆஸ்பராகஸ், கார்னேசன், கோழிக்கொண்டை, செவ்வந்தி, டேலியா, சோம்பு, அத்தி, கோல்டன் ராடு ஆகியவை உலர் உற்பத்திக்கு மிகவும் ஏற்றவை. தென்னையில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளில் குறிப்பாக அவற்றிலிருந்து அதிகளவு வீணாக்கப்படும் புள்ளி வட்டம் பகுதி பல்வேறு விதங்களில் சிறந்த அலங்கார உலர் மலர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் சிறுதானிய மஞ்சரிகள் மற்றும் கதிர்களும் உலர் மலர் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.

உலர் மலர்களின் தயாரிப்பு முறைகள்

காற்றில் உலர வைத்தல்: மலர்க் கொத்துக்களை சிறு சிறு கொத்துக்களாகக் கட்டி தலைகீழாக தொங்கவிட வேண்டும். பூக்களின் தன்மை, அறுவடை, உலர வைக்கும் இடத்தின் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து மலர்கள் உலர்வதற்கு ஒரு வாரத்தில் இருந்து பல மாதங்கள் வரை ஆகும்.

நீரில் உலர வைத்தல்: பூங்கொத்தின் தண்டினை 4.5 சென்டிமீட்டர் அளவு நீரில் நிறுத்தி வைப்பதன் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு பின்னர் ஆவியாக்கப்படுகிறது. இந்த முறையில் உலர வைக்க ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்கள் வரை ஆகும். ஹைட்ரான்ஜியா, ஜிப்சோபில்லா, கார்ஸ்பிலிவர்ஸ், பைமூசா போன்றவற்றிற்கு இம்முறையைப் பயன்படுத்தலாம்.

உலர்த்திகள் மூலம் உலர வைத்தல்:மலர்களின் ஈரப்பத அளவை குறைப்பதற்காக சிலிகாஜெல், போராக்ஸ் ஆலம் மற்றும் மணல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஜினியா, டெல்பீணியம், டேபோடில், டேலியா, கார்னேசன் மற்றும் செண்டுமல்லி போன்ற மலர்களை எளிதில் உலர வைக்கலாம்.

நுண் அடுப்பு மூலம் உலர வைத்தல்: கோல்டன் ராடு, மார்ஜோரம் மற்றும் சீடம் போன்ற மலர்களை நுண் அடுப்பில் வைத்து எளிதில் உலர வைத்து பயன்படுத்தலாம்.

கிளிசரின் மூலம் உலர வைத்தல்: இம்முறையில் பெரும்பாலும் மலர்கள் தவிர்த்து இலைகள் மற்றும் செடியின் மற்ற பாகங்கள் உலர வைக்கப்படுகின்றன. அழுத்த முறையில் உலர வைத்தல் என்பது மிக சுலபமான முறையாகும். தாவரவியல் மாணவர்கள் பெரும்பாலும் இந்த முறையைக் கையாளுகின்றனர். செய்தித்தாள், பழைய நோட்டுப் புத்தகங்கள், நீர் உறிஞ்சும் தாள்கள் மற்றும் வடிகட்டும் பேப்பர் கொண்டு மலர்களை உலர வைக்கலாம்.

வர்ணம் பூசுதல்: மேற்கூறிய முறைகளின் மூலம் உலர வைக்கப்பட்ட மலர்களுக்கு ஏற்ப நிறப் பொருத்தம் பார்த்து மெல்லிய பிரஷ் மூலம் எனாமல், சுவரொட்டு வர்ணம், குழாய் வர்ணம் மற்றும் உள்துளை வர்ணம் கொண்டு பூச்சு கொடுக்கும்போது உலர் மலர்கள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும். இந்த உலர் மலர்களை வெவ்வேறு அலங்காரப் பூச்செடிகளில் வைத்து அழகுபடுத்தி மலர் வியாபார மையங்களுக்கு அனுப்பி நல்ல விலை பெறலாம்.

பினி சுந்தர், ஐரின் வேதமணி, அசோக்குமார்.
தமிழ்நாடு வேளாண்மை
பல்கலைக்கழகம்,
தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கோயம்புத்தூர்.

நெல் விவசாயிகளுக்கு நல்ல செய்தி

நெல் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஓர் இனிப்பான செய்தியை வழங்கி இருக்கிறது. அதாவது 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு, ஒரு குவிண்டால் சாதாரண நெல்லுக்கு ரூ.105 உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130 கூடுதல் ஊக்கத்தொகையாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குவிண்டால் சாதாரண நெல் ரூ.2405 என்றும், சன்ன ரக நெல் ஒரு குவிண்டால் ரூ.2450 எனவும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Related posts

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த மிக மோசமான அரசு.. ஒன்றிய அரசின் பாரபட்ச செயல்பாடுகளை பட்டியலிட்டு தயாநிதி மாறன் ஆவேசம்!!

கோபி அருகே தேங்காய் நார் மில்லில் திடீர் தீ விபத்து..!!

சிறுமிகள் கடத்தல் வழக்கு: ஆயுள் தண்டனை குறைப்பு