இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்

லண்டன்: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சுனக் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 வரை உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இம்முறை சுனக்கை எதிர்த்து லேபர் கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மர் போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர லிபரல் டெமாகிரேட்ஸ், கிரீன் கட்சி, ஸ்காட்லாந்து தேசிய கட்சி, எஸ்டிஎல்பி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், ஏராளமான சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

4.6 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 40 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையிலேயே மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் வந்து ஆர்வமுடன் வாக்களித்தனர். பிரதமர் சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் வடக்கு யார்க்ஷயர் தொகுதியில் வாக்களித்தார். லேபர் கட்சி வேட்பாளர் ஸ்டார்மர் தனது மனைவி விக்டோரியாவுடன் வடக்கு லண்டன் தொகுதியில் வாக்களித்தார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து சேர்த்து மொத்தம் 650 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் ஆட்சி அமைக்க 326 இடங்கள் தேவை.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் சுனக் கட்சி 53 முதல் 150 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், லேபர் கட்சி வரலாற்று வெற்றியுடன் 14 ஆண்டுக்குப் பின் மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து நேரப்படி இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இதில், ரிஷி சுனக் ஆட்சியை தக்கவைப்பாரா? யார் ஆட்சி அமைப்பார்கள்? என்பது இன்று காலை உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு

தமிழ்நாட்டில் 3 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது

வார விடுமுறையையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்