ஓட்டப் பந்தயத்திற்கு உசேன் போல்ட்.. கிரிக்கெட்டுக்கு தோனி. அதேபோல அரசியல் துறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் :அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்

சென்னை : உசேன் போல்ட், எம்.எஸ்.தோனியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்பிட்டு பேசியுள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய பதிலுரையில், “விளையாட்டு என்று எடுத்துக் கொண்டால் ஒரு சிலரின் பெயர்கள் மட்டும் தான் வரலாற்றில் நிலைத்து நிற்கும். ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட். கிரிக்கெட் என்றால் மகேந்திர சிங் தோனி. இவர்கள் இருவருமே அவரவர் துறைகளில் வெற்றிகளையும் பதக்கங்களையும் குவித்தவர்கள். ஒவ்வொரு போட்டியிலும் அவர்களின் சாதனைகளை அவர்களே முறியடித்துக் கொள்வார்கள். அதேபோலதான் அரசியல் துறையில் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களம் காணும் ஒவ்வொரு தேர்தல்களிலும் சாதனைகளை குவித்து வருகிறார்.

அந்த வகையில் நமது திராவிட முன்னேற்றக்கழக அணி நடந்து முடிந்த மக்களவை தேர்தல் களத்தில் சிறப்பாக விளையாடி, உழைத்து 40க்கு 40 பதக்கங்களையும் வென்று இன்றைக்கு சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை பரிசலீத்த தமிழக மக்களுக்கு இந்த மாமன்றத்தின் மூலம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது முதலமைச்சர் மீது நாங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறோமோ, அதே மாதிரி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அவர் மீது தளராத நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் வைத்துள்ளார்கள். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு, எப்படி இந்தியாவிலேயே நம்பர் 1 அரசாக திகழ்கிறதோ, அதே போல் முதலமைச்சரால் வழிநடத்தப்படும் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையும் இன்று நம்பர் 1 இடத்தை நோக்கி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஜீவரத்தினம் காலமானார்..!!

ஒரு மனிதர் இறந்தாலும் அது மாபெரும் இழப்பு.. தேர்தல் தோல்வியை மறைக்க கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி அதிமுக சதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்

பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் வாட்டி வதைக்கும் வெயில்; இதுவரை 568 பேர் உயிரிழப்பு