வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த நான்கு டூவீலர்கள் தீ வைத்து எரிப்பு

ஓசூர்: ஓசூரில், வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த நான்கு டூவீலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பேடரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான வீட்டில் சிலர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அனைவரது டூவீலர்களையும் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் 4 டூவீலர்களை வீட்டின் முன் போர்டிகோ பகுதியில் நிறுத்தி வைத்திருந்தனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், டூவீலர்களுக்கு தீ வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அனைத்து வாகனங்களிலும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. வீட்டின் முன்பக்க கதவு, ஜன்னல்களும் எரிந்தது.

ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் வெடித்து சிதறின. சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் ராஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். ஜன்னலுக்கு வெளியே தீ ஜூவாலையை கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். வீட்டில் இருந்து வெளியில் வரமுடியாத அளவிற்கு தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அருகில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன்பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் நான்கு டூவீலர்கள் தீயில் எரிந்து எலும்பு கூடுபோல் மாறியது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து, முன்விரோத தகராறில் யாராவது தீ வைத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த நான்கு டூவீலர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

நிபா வைரஸ்: நீலகிரி அருகே தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதிகளில் வாகனங்கள் தீவிர கண்காணிப்பு

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தாலிபான்கள் அரசு தடை

நெல்லை அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு!!