டூவீலர் ஓட்டி சிறுவன் விபத்து தந்தை, பைக் கொடுத்தவர் கைது: புதிய சட்டப்படி வாகனப்பதிவு ரத்தாகிறது

சேலம்: சேலத்தில் பைக்கை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை, பைக் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த மாதம் முதல் அமலான புதிய சட்டப்படி வாகனப்பதிவும் ரத்து செய்யப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் சமீபத்தில் 17 வயது சிறுவன் மதுபோதையில் சொகுசு காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி ஐடி ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர். இதுபோன்ற சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்தி, விலைமதிப்பில்லாத உயிர்கள் பலியாவதை தடுக்க ஒன்றிய அரசு புதிய வாகன சட்டத்தை கடந்த (ஜூன்) 1ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி, 18 வயதுக்குபட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால், சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ரூ.25,000 அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் ஓட்டிய சிறுவனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும், 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது. அதேபோல பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டி பிடிபட்டால், வாகனத்தின் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை கடலூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன், பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டி சென்றுள்ளான். அப்போது, காமராஜர் நகர் காலனியை சேர்ந்த அங்கப்பன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளான். காயமடைந்த அங்கப்பன், சிறுவன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி அம்மாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், 18 வயது நிறைவடையாத சிறுவன், அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு சொந்தமான பைக்கை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பைக்கை ஓட்டக்கொடுத்த வாகன உரிமையாளர் குணசேகரன், சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவனது தந்தை குமார், சிறுவன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சிறுவனின் தந்தை குமார், பைக் உரிமையாளர் குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர். இதனால், போலீசார் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் புதிய சட்டப்படி வாகனப்பதிவும் ரத்து செய்யப்பட உள்ளது.

Related posts

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!

கடலூர் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை!

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!