உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் பதவியேற்பு: முழு அளவை எட்டிய நீதிபதிகள் எண்ணிக்கை

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் இரண்டு புதிய நீதிபதிகள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 34 நீதிபதிகள் செயல்படலாம். இதில் தற்போது 32 நீதிபதிகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஜூலை இரண்டாவது வாரத்திற்குள் மேலும் நான்கு நீதிபதிகள் பணியிலிருந்து ஓய்வுப்பெற உள்ளனர். அதனால் நீதிபதிகளின் எண்ணிக்கை 28ஆக குறைய வாய்ப்பு உள்ளது. எனவே காலியிடங்களை நிரப்பும் வகையில் ஆந்திரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய கொலிஜியம் அமைப்பு பரிந்துரையில் தெரிவித்திருந்தது.

இதில் ஆந்திரப்பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பிரசாந்த் குமார் மிஸ்ரா, இந்திய அளவில் உள்ள நீதிபதிகள் பட்டியலில் 21வது இடத்தில் உள்ளார். எட்டு ஆண்டுகளாக சட்டீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கடந்த 2021 அக்டோபர் 13ம் தேதி முதல் ஆந்திரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியில் உள்ளார். இதே போன்று உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பால் பரிந்துரை செய்யப்பட்டபவர்களில், மூத்த வழக்கறிஞர் கே.வி விஸ்வநாதன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 1966 மே 26ம் தேதி பிறந்த இவர் கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

கடந்த 1988ம் ஆண்டு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தில் வழக்கறிஞராக பதிவு செய்து தனது சட்டப் பணியை தொடங்கினார். இருவருக்கும் ஒன்றிய அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை அவர்கள் உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் நீதிபதி கே.வி.விஸ்வநாதனை பொறுத்தமட்டில் 2031ம் ஆண்டு மே 25ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பார். குறிப்பாக வரும் 2030 ஆகஸ்ட் 11ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கே.வி.விஸ்வநாதன் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது.

* நீதிபதி விஸ்வநாதன் பொள்ளாச்சியை சேர்ந்தவர்
உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.வி.விஸ்வநாதன் தமிழ்நாட்டின் பொள்ளாச்சியை பூர்வீகமாகக் கொண்டவர். பொள்ளாச்சி ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளியில் பள்ளிப் படிப்பை படித்த அவர், அமராவதிநகர் சைனிக் பள்ளியிலும், உதகை சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியிலும் படித்துள்ளார். கோவை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற விஸ்வநாதன், 1988ல் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தில் வக்கீலாக பயிற்சி எடுத்துள்ளார். இவரது தந்தை கே.வி.வெங்கட்ராமன் கோவையில் அரசு வக்கீலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி