Sunday, October 6, 2024
Home » திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம்

திருப்பங்களை தந்தருளும் திருவேங்கடநாதபுரம்

by Kalaivani Saravanan
Published: Last Updated on

* தாமிரபரணி கரையில் ஒரே பகுதியில் மேல் திருப்பதி, கீழ்த்திருப்பதி மற்றும் காளகஸ்தியை போன்ற ஆலயமுள்ள தலமே திருவேங்கடநாதபுரம்.

* வியாச மாமுனிவரின் சீடரான பைலர், தாமிரபரணி கரையில் ஒரு கோடி மலரால் பூஜித்து, அர்ச்சனை செய்த இடம் ஸ்ரீநிவாச தீர்த்தக்கட்டம்.

* பைலர் பூஜித்தபோது தாமிரபரணி தாயுடனும், கோடி மலர்களுடனும் சேர்ந்து பிரகாசமாக திருவேங்கடநாதர் தோன்றினார். பூதேவி, ஸ்ரீதேவி, அலர்மேல்மங்கையுடன் பெருமாளை பிரதிஷ்டை செய்து வணங்கினார் பைலர். அன்று முதல் இத்தலம் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது.

* வெங்கடப்ப நாயக்கர் ஸ்ரீநிவாசர் தீர்த்த கட்டத்தில் மூழ்கி வணங்கினார். அசரீரியாக பெருமாள் ‘ஆயிரம் குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கு’ என்றார். நாயக்கரும் அன்னதானம் வழங்கி குழந்தைப்பேறு பெற்றார். நன்றிக் கடனாக, கோயிலைக்கட்டினார்; அந்த தலத்திற்கு வேங்கடநாதபுரம் என்று பெயரும் வைத்தார்.

* மூலவர் திருவேங்கடமுடையார் ஸ்ரீதேவி பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார்.

* மூலவர் தவிர தனிச் சந்நதிகளில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் வீற்றிருக்கின்றனர். விஷ்வக்சேனருக்கும் தனிச் சந்நதி உண்டு.

* திருவேங்கடநாதபுரத்துக்கு திருவணாங்கோயில், சங்காணி, குன்னத்தூர் என்ற சுவேதா மலை, சாலிவாடீஸ்வரம், வைப்பராச்சியம் ஆகிய பெயர்கள் உண்டு. தற்போது இத்தலத்தை திருநாங்கோயில் மற்றும் மேலத் திருவேங்கடநாதபுரம் என்றழைக்கிறார்கள்.

* திருப்பதி ஏழுமலையானுக்கு செலுத்த வேண்டிய நேர்ச்சையை தென் திருப்பதியான திருவேங்கடநாதபுரத்தில் செலுத்தலாம். ஆனால் இங்கு நேர்ந்து கொள்ளும் நேர்ச்சையை திருப்பதியில் செலுத்த முடியாது.

* குழந்தைப் பேறுக்காக உருளிப் பானையில் பொங்கலிட்டு தானம் செய்து அந்தப் பானையை கொடிமரத்தடியில் கவிழ்த்து வைக்கின்றனர். விரைவில் குழந்தைப்பாக்கியம் பெறுகின்றனர்.

* மணி மண்டபத்திற்கு எதிரே மதில் சுவரின் உட்புறம் தென்கிழக்கு மூலையில் தல விருட்சமான நெல்லிமரம் உள்ளது.

* திருப்பதி மலை வெண்கற்களால் ஆனது போலவே சங்காணி மலை குன்றும் வெண்கற்களால் ஆனது.

* புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருடசேவை நடப்பது வழக்கமானது தான்; ஆனால், பக்தர்கள் விரும்பி கேட்கும் நாட்களில் கூட கருடசேவை நடத்தப்படுகிறது.

* தெற்குப் பிராகாரத்தில் உள்ள வெண்கலக்கருடன் இருபுறமும் மடித்த இறக்கைகளுடன் கையில் சங்கு-சக்கரத்துடன் அபூர்வமாகக் காணப்படுகிறார்.

* இத்தலத்தில் உள்ள கீழ்த்திருப்பதி வரதராஜப்பெருமாள், பிருகு முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவர் சதுர்புஜத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

* பெருமாளின் வலக்கரம் ஒன்றில் சக்கரமும், மற்றொரு கரத்தில் தனரேகையும் ஓடுகிறது. இடதுபுறக்கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் கதாயுதமும் காணப்படுகின்றன.

* இவரை தனரேகைப்பெருமாள், வாழவைக்கும் பெருமாள் என்கிறார்கள். தனரேகை கரத்தில் பணம் வைத்து எடுத்துச் சென்றால் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாதாம்.

* பெருமாளின் கையில் தனரேகை ஓடும் காரணத்தால் இதை சுக்கிரத்தலம் என்பர்.

* காளஹஸ்திக்கு இணையான தலமாக இங்குள்ள சிவாலயம் விளங்குகிறது.

* கோத பரமேஸ்வரரும், அன்னை சிவகாமியும் சர்ப்பதோஷம், நாக தோஷம் நீக்குகின்றனர். தடைப்பட்டதிருமணங்கள் விரைவில் நடக்கின்றன.

* இத்தலத்திற்கு நெல்லை சந்திப்பிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. ஆட்டோவிலும் செல்லலாம்.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி.

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi