சென்னை விமானநிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தலில் திடீர் திருப்பங்கள்: மீண்டும் பரபரப்பு துவக்கம்


மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 267 கிலோ கடத்தல் தங்கம், சுங்கச் சோதனையின்றி வெளியே எடுத்து சென்ற விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், தற்போது பல்வேறு திடீர் திருப்பங்கள், தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் மீண்டும் பரபரப்பு துவங்கி அதிகரித்து வருகிறது. சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான கடத்தல் தங்கம், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் எவ்வித சுங்கச் சோதனைகளும் இன்றி வெளியே எடுத்து செல்லப்பட்டு உள்ளன. இவ்வகையில், கடந்த 2 மாதங்களில் ₹167 கோடி மதிப்பிலான 267 கிலோ கடத்தல் தங்கம் வெளியே எடுத்து செல்லப்பட்டு உள்ளது.

எனினும், இந்த கடத்தல் தங்கம் ஒன்றுகூட சுங்கச்சோதனை நடத்தப்படவும் இல்லை, அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றவும் இல்லை. இவ்வகையில், ஒட்டுமொத்தமாக அனைத்து தங்கக் கட்டிகளையும் சுங்கச்சோதனை இன்றி கடத்தல் ஆசாமிகள் வெளியே எடுத்து சென்றுள்ளனர். இவை அனைத்து குறிப்பாக டிரான்சிஸ்ட் பயணிகள் மூலமாகவே நடந்துள்ளன. இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் முழுவதும் சென்னை விமானநிலைய ஏர் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து, ஜூன் கடைசி வாரத்தில் துபாயில் இருந்து சென்னை வழியாக, இலங்கை செல்லவிருந்த ஒரு இலங்கை பயணியை ஏர் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகள் விசாரித்தனர்.
அப்போது அப்பயணி, துபாயில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை, சென்னை சர்வதேச விமான முனையத்தில் இருந்து பரிசுபொருள் விற்பனை கடை ஊழியர்கள் மூலம் எவ்வித சுங்கச் சோதனைகளும் இன்றி விமானநிலையத்தை விட்டு வெளியே எடுத்து சென்று வைத்துவிட்டு,

பின்னர் அதே பயணி சென்னையில் இருந்து இலங்கைக்கு மற்றொரு விமானத்தில் செல்ல முயற்சித்துள்ளார் எனத் தெரியவந்தது. அந்த இலங்கை பயணியை ஏர் இன்டெலிஜன்ஸ் அதிகாரிகள் மடக்கிப் பிடித்து, கிடுக்கிப்பிடியாக விசாரித்தனர். இந்த இலங்கை பயணியைத் தவிர, மேலும் சில கடத்தல் பயணிகள் மூலமாக கடந்த 2 மாதங்களில் சென்னை விமானநிலையம் வழியாக எவ்வித சுங்கச் சோதனைகளும் இன்றி ₹167 கோடி மதிப்பிலான 267 கிலோ கடத்தல் தங்கத்தை வெளியே எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இக்கடத்தல் சம்பவங்கள் அனைத்துக்கும், சென்னை சர்வதேச விமான முனையத்தில் பரிசுபொருள் விற்பனை கடை நடத்தும் பிரபல யூ-டியூபர் சபீர் அலியும் அவரது கடையில் வேலைபார்க்கும் 7 ஊழியர்களும் உடந்தை என்பதும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ கடத்தல் தங்கம் சுங்கச் சோதனையின்றி வெளியே கொண்டு சென்ற விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்து சபீர் அலி, அவரது கடை ஊழியர்கள் 7 பேர், ஒரு இலங்கை பயணி உள்பட 9 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், இதுதொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், சென்னை விமானநிலைய சர்வதேச முனையத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இந்த பரிசுபொருள் விற்பனையை சபீர் அலி துவங்கியுள்ளார் எனத் தெரியவந்தது. இக்கடையை வித் வேதா பிஆர்ஜி எனும் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ₹1 கோடி டெபாசிட் செலுத்தி வாடகைக்கு சபீர் அலி எடுத்திருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக அந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்தவரும் பாஜ பிரமுகருமான ஒருவரிடமும், இந்திய விமானநிலைய ஆணையத்தின் சென்னை விமானநிலைய கமர்ஷியல் பிரிவு இணை பொதுமேலாளரிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். எனினும், இவ்வழக்கில் மேற்கொண்டு யாரும் கைது செய்யப்படவும் இல்லை. கடத்தப்பட்ட 267 கிலோ தங்கத்தில் ஒரு கிராம்கூட இன்னும் பறிமுதல் செய்யப்படவும் இல்லை.

இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வு துறையினரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ கடத்தல் தங்கம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட யூ-டியூபர் சபீர் அலி, இலங்கை பயணி மற்றும் 2 பேர்மீது காபிபோசா சட்டம் பாய்ந்தது. இதன்மூலம், அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியே வரமுடியாதபடி சுங்கத்துறை அதிகாரிகள் சிறையில் அடைத்துள்ளனர். காபிபோசா சட்டத்தின்படி சபீர் அலி, இலங்கை பயணி ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்ய முயன்றபோது, இருவரும் ‘தங்கள் மீதான வழக்கு விவரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எங்களுக்கு அனைத்து ஆவணங்களையும் தமிழில் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, 2 பேர்மீதான குற்றச்சாட்டு நகல்கள் அடங்கிய 486 பக்கங்களையும் அதிகாரிகள் தமிழில் மொழிபெயர்த்து, அவற்றை நகல்கள் எடுத்து இருவருக்கும் வழங்கப்பட்டன. அதோடு, இவர்கள்மீது போடப்பட்டுள்ள காபிபோசோவை, அதற்கான கமிட்டி ஆய்வு செய்து உறுதி செய்துவிட்டால், கள்ளக் கடத்தல் மூலம் இருவரும் சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, இக்கடத்தல் சம்பவத்துக்கு தலைவனாக செயல்படும் முக்கிய குற்றவாளி ஒருவர் தலைமறைவாக இருப்பது சுங்கத்துறை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சென்னை சர்வதேச விமான முனையத்தில் பரிசுபொருள் கடைக்கு சபீர் அலி ₹1 கோடி டெபாசிட் பணம் கட்டியதில், பெரும்பங்கு தொகையை அந்த கடத்தல் கும்பல் தலைவன்தான் கொடுத்து உதவியதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு உள்ள 9 பேரை தவிர, 10வது நபராக அந்த கடத்தல் கும்பல் தலைவனையும் அதிகாரிகள் சேர்த்துள்ளனர்.

எனினும், அந்த கடத்தல் கும்பல் தலைவன் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார். இதையடுத்து, அந்த கடத்தல் கும்பல் தலைவனை சுங்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி 3 முறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். எனினும், அவற்றை கடத்தல் கும்பலின் தலைவன் வாங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். மேலும், தன்னை சுங்கத்துறை கைது செய்யாமல் இருக்க, முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளார். எனினும், அவருக்கு முன்ஜாமீன் வழங்க சுங்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மற்றொரு மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த கடத்தல் கும்பல் தலைவன் வெளிநாடுகளுக்குத் தப்பி செல்வதை தடுக்க, விமானநிலைய குடியுரிமை அலுவலர்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் ரகசிய தகவல் தெரிவித்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சுங்கத்துறையினரால் தேடப்படும் கடத்தல் கும்பல் தலைவன் பிடிபடும்போது, சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ கடத்தல் தங்கம் எவ்வித சுங்கச்சோதனைகளும் இன்றி வெளியே கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான பல்வேறு திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகலாம். இதில், தமிழகம் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களை சேர்ந்த சிலரும் கைதாகலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையே, சென்னை விமானநிலையத்தில் 267 கடத்தல் தங்கம் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில், சபீர் அலி உள்பட 2 பேரை தவிர, மீதமுள்ள 7 பேரும் நீதிமன்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், எனினும் அவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்படவில்லை. அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இத்தகைய பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் மூலம் 267 கிலோ கடத்தல் தங்க விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது

நகை பறிக்க சென்றபோது சத்தம் போட்டதால் மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்தோம்: கைதான 4 பேர் வாக்குமூலம்