3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை இந்த டியூனிக்!

இந்தியப் பெண்களின் உடைகளில் குறிப்பாக ஜீன்ஸ், பலாஸோ, ஸ்கர்ட் இவைகளுடன் அதிகம் பயன்படுத்தப்படும் மேலாடைகள் இந்த டியூனிக் வகைகள்தான். பொதுவாக ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் மாடர்ன் உடைகள் உடுத்தினாலும் உடல் வளைவுகளை அதிகம் ஹைலைட் செய்யாத வகையில் உடுத்தவே பல பெண்கள் விரும்புகிறார்கள். அதற்கு பேருதவியாக இருப்பது இந்த டியூனிக் வகை டாப்கள்தான். பின்பக்க இடைப்பகுதியை மறைத்து, உடலை இறுக்கிப் பிடிக்காமல் அதே சமயம் மாடர்னாகவும், டிரெண்டாகவும் உடுத்தத் தகுதியானவை இந்த டியூனிக் குர்தாக்கள். இவைகள் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்கிறார் பேன்ஸி ராஜா (செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்).

‘ஆம் இந்த டியூனிக்கள் 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானியர்களால் பயன்படுத்தப்பட்டது. ரோமானியர்கள் ஒரு நீண்ட துணியை மடித்து கழுத்துப் பகுத்திக்கு ஒரு சிறு துளை போட்டுக்கொண்டு அப்படியே உடலைச் சுற்றுக் கையிறு அல்லது நீண்ட ரிப்பன் போன்ற துணி கொண்டு கட்டிக் கொள்வார்கள். இதனைத்தான் டியூனிக் என்பார்கள். டியூனிக் பெரும்பாலும் முட்டிக்கு மேல் பகுதி வரை இருக்கும் கவுன் போல அணியப்படும். பொதுவாக இவை எகிப்தியர்கள், ரோமானியர்களில் ஆண்கள்தான் முதன்முதலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தையல், எம்பிராய்டரி இப்படி எதுவும் இல்லாத நிலையில் இப்படி துணியை மடித்து கட்டிக்கொண்டு கவுன் போல உடுத்திக்கொள்வதுண்டு. அடுத்து வந்த காலங்களில்தான் துணிகளில் தாவர டை பயன்படுத்தப்பட்டு கலரிங் துணிகளாகப் பயன்படுத்தும் முறை கொண்டு வரப்பட்டது. அதிலேயே நீளமான கவுன்கள் எனில் பெண்களுக்கு மேக்ஸி உடைகள். தொடர்ந்து கிரேக்கம், பாரசீகம், வரை இந்த டியூனிக் உடைகள் ஆண்கள் உடைகளாக பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த டியூனிக் உடைகள் 18ம் நூற்றாண்டுகளில் இராணுவங்களில் உயரிய பதவிகளில் உள்ளோருக்கு தொடை வரை அல்லது முட்டி வரை டிரவுசர்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட மேலாடை அதனுடன் தோள்பட்டைகளில் இணைக்கப்பட்ட மெடல்கள் சகிதமாக பயன்படுத்தப்பட்டது. பழங்கால போலீஸ் உடைகளிலேயே இந்த பின்பக்கத்தை மூடிய சீருடைகள்தான் பயன்படுத்தப்பட்டன’ என டியூனிக்கின் வரலாறு குறித்து பேசி பேன்ஸி தொடர்ந்து தற்கால டியூனிக் உடைகள் பயன்பாடு மற்றும் வகைகள் குறித்தும் விபரமாக பகிர்ந்தார்.

‘இப்போது பெண்களால் அதிகம் பயன்படுத்தப்படும் உடையாக மாறியிருக்கிறது இந்த டியூனிக். குறிப்பாக ஜீன்களுக்கு மேல் டாப் இந்த டியூனிக்தான். டியூனிக் பெண்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலமாகக் காரணம் அதன் வசதிதான். குறிப்பாக டியூனிக் இறுக்கமாக இருக்காது, இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவை குர்தி வகைகளாக எடுத்துக்கொள்ளப்படும். டியூனிக்குகள் தோள்பட்டை, இடைப் பகுதி என எங்கும் லூசான ஃபிட்டில் வசதியாக அணியும்படி டிசைன் செய்யப்படுபவை. இதனுடன் இணைந்த பலாஸோ, ஸ்கர்ட்டுடன் பயன்படுத்தினால் சராரா, கராரா, என இவைகள் தற்போது பல வகைகளாகவும் மாற்றம் பெற்றுள்ளன. டிசைனிங் முறைப்படி இந்த டியூனிக் என்னென்ன வகைகள் உள்ளன.

ஏ-லைன் டியூனிக்தான் அதிகம் பிரபலம். அதாவது நெஞ்சுப்பகுதியில் மட்டும் கொஞ்சம் குறுகலாக கீழே விரிந்து வரும். பார்ப்பதற்கு ஆங்கில லெட்டர் ‘A’ எழுத்துப் போலிருப்பதாலேயே ஏ லைன் என்போம். இதில் முன்பக்கம் மூன்று மடிப்புகள், அல்லது ப்ளீட்ஸ்கள் கொடுக்கப்பட்ட டியூனிக் டாப்கள் தற்போது அதிகம் மார்கெட்டில் தென்படுகின்றன. காரணம் இவை தொப்பையை மறைத்துக் காட்டும். மேலும் உடலின் வளைவுகளை எடுத்துக் காட்டாமல் இருக்கும். எனவே கர்ப்பமான பெண்களும் இந்த டியூனிக் டாப்களுக்கு அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். சில வகை கஃப்தான் வகையாக நடுவில் ஒரு கயிறு, அல்லது கயிறின்றி ஒரே நீள டியூனிக் டாப்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஷர்ட் டியூனிக் அதாவது காலர் வைக்கப்பட்டு , கையில் மடிப்புகள் சகிதமாக சட்டையையே நீளமாக தைத்தால் எப்படி இருக்குமோ அப்படித் தைத்துப் பயன்படுத்தும் முறை. இவற்றை ஆண்களும் ஷார்ட்ஸுடன் பயன்படுத்துகிறார்கள். மேலும் சில விமானப் பணிப்பெண்கள், அலுவலக சூட்களில் கூட இந்த டியூனிக் அங்கம் வகிப்பதைக் காணலாம்’ எந்தத் துணிகளில் அதிகம் இந்த டியூனிக் டாப்கள் டிசைன் செய்யப்படுகின்றன. எந்த உடலுக்கு என்ன வகை டியூனிக் டாப்கள் தொடர்ந்தார் பேன்ஸி.

‘ டியூனிக் பொருத்தவரை வயது, உடல் எடைகள் என எதுவும் தேவையில்லை. யாரும் பயன்படுத்தலாம் பாணி உடை. காரணம் அதன் லூஸ் ஃபிட் டிசைன். உடல் பருமனான பெண்கள் கூட கேஷுவலான டியூனிக் டாப் அதனுடன் ஒரு பெல் பாட்டம் ஜீன் அல்லது பலாஸோ ஜீன், பேகி பேன்ட் என மேட்ச் செய்துகொள்ளலாம். எனவே டியூனிக்கிற்கு இதுதான் ஸ்டைல் என்றில்லை. பெரும்பாலும் காட்டன், லினென், ரேயான், மல்மல் போன்ற துணிகளில்தான் அதிகம் டியூனிக் டிசைன் செய்யப்படுகின்றன. ரூ. 250 முதலே ஆன்லைன், நேரடி விற்பனை என எங்கும் கிடைக்கும் உடைகள் இவை. அதிலே ஆப்பிள் கட் என கிழே வட்டமாக வெட்டப்பட்ட ஸ்டைல், ¾ ஸ்லீவ் , ஓரத்தில் இருப்பக்கமும் சின்ன கட், சில வகை சைனீஸ் காலர், சில வகையில் சாதாரண ஷர்ட் காலர், சில வகை வட்ட போட் நெக், என இவற்றில் வகைகள் பல உள்ளன. சில டியூனிக் டாப்கள் கவுன் ஸ்டைலிலேயே முட்டி வரை பெண்கள் அணிந்து கொண்டு அதற்கு மேட்சிங்கான பூட்ஸ், அல்லது ஸ்டிராப் காலணிகள் பயன்படுத்துவதையும் பார்க்கலாம். அவரவர் வசதிக்கு ஏற்ப இந்த டியூனிக் மாற்றம் செய்துக்கொள்ளும் வகையான உடை என்பதாலேயே 3ம் நூற்றாண்டில் துவங்கிய ஃபேஷன் இப்போது வரை தனக்கென தனி அந்தஸ்துடன் நிலைத்து நிற்கிறது’ உற்சாகமாக முடித்தார் பேன்சி ராஜா.
– ஷாலினி நியூட்டன்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்