காசநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி ஒன்றிய அரசு விருது: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!!

சென்னை: காசநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வழங்கப்பட்ட விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெறப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்து, காசநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டி ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் கடந்த மார்ச் மாதம் வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2022ம் ஆண்டுக்கான காசநோய் இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருவதற்காக தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு அரசின் சீரிய முயற்சிகளால் 2025-க்குள் காசநோயை தமிழ்நாட்டிலிருந்து ஒழித்து, காசநோய் இல்லாத தமிழ்நாடாக மாற்ற இலக்கு நிர்ணயித்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த இரண்டாண்டுகளாக காசநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகளை பாராட்டும் வகையில் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் 24.3.2023 அன்று உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காசநோய் இல்லாத நிலையை நோக்கி முன்னேறி வருவதற்காக 2022-ஆம் ஆண்டிற்கான தங்கப் பதக்கங்கள் திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கும், வெள்ளிப் பதக்கங்கள் மதுரை, தூத்துக்குடி, கரூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், வெண்கலப் பதக்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டன. இப்பதக்கங்களுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.

இந்தியாவில் காசநோய் இல்லாத நிலை மூன்று மாவட்டங்கள் மட்டுமே எய்தியுள்ளன. அதில் தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி மாவட்டமும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நீலகிரி மாவட்டத்திற்கு 2022 ஆண்டிற்கான இந்தியாவில் காசநோய் இல்லாத நிலைக்கான பதக்கமும், சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார், இ.ஆ.ப., தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டாக்டர் டி.எஸ். செல்வவிநாயகம், மாநில காசநோய் அலுவலர் திருமதி ஆஷா பிடரிக் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்