‘உண்மையை சொன்னா சுடதான் செய்யும்’ கார்த்தி சிதம்பரத்தை சுத்துப்போட்ட பாஜவினர்

தமிழ்நாட்டில் 34 ரயில் நிலையங்கள் உட்பட இந்தியா முழுவதும் 554 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கும் பணிகளை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில்நிலையத்தில் நடந்த அம்ரித் பாரத் திட்ட துவக்க விழாவின் போது, கார்த்தி சிதம்பரம் எம்.பி பேசுகையில், ‘‘இந்திய ரயில்வே காரைக்குடி ரயில்நிலையத்தை மேம்படுத்த ரூ.13.92 கோடி ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன். இந்த நிதி யாரோ பெரிய மனது வைத்து நமக்கு அனுப்பியதாக நினைத்துவிட வேண்டாம். தமிழ்நாடு வரிகட்டும் போது நாம் ஒரு ரூபாய் கட்டினால் திரும்பி வருவது 29 காசுதான். ஆனால் வட இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒரு ரூபாய் வரிகட்டினால் 2 ரூபாய் 73 காசு மீண்டும் செல்கிறது. தமிழ்நாட்டில் வரிகட்டி வடஇந்தியாவை வாழ வைக்கிறோம்.

எனவே இந்த ரூ.13.92 கோடி என்பது நீங்கள் கட்டிய வரி மீண்டும் திரும்ப வருகிறது. யாரும் பெரிய மனது வைத்து நமக்கு வழங்கவில்லை…’’ என பேசிக்கொண்டிந்த போதே பாஜ மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.வி.நாராயணன், மாநில செயற்குழு சிதம்பரம் உள்பட பாஜவினர் 100க்கும் மேற்பட்டவர்கள் சுத்துப்போட்டு எம்பியை பேசவிடாமல் தடுத்து கோஷமிட்டனர். அப்போது, ‘ஏய் உட்காருயா… நான் சொன்னதுல என்ன தப்பு’ என்று ஆவேசமாக கேட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்.பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜவினருக்கு உண்மை சுடுகிறது. தமிழ்நாட்டிற்கு என்ன நிதி வருகிறது என உண்மையான புள்ளிவிவரத்தை எடுத்துச் சொன்னதால் பாஜவினருக்கு மனது உறுத்தி அவர்களை கோபமடைய வைத்துள்ளது.’’ என்றார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி