வெற்றிக்கோப்பை

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய வீரர்கள் போராடி பெற்று தந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து முடிந்துள்ள டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பல்வேறு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அதற்கேற்பவே லீக் போட்டிகளில் அமெரிக்க ஆடுகளங்களில் இந்திய அணியால் பெரிய அளவில் ஸ்கோர் செய்ய முடியாமல் போனது.

குறைந்த ரன்களை இந்திய அணி அடித்துவிட்டு, பின்னர் பவுலர்களின் துல்லியமான பந்துவீச்சால் தன்னை தற்காத்துக் கொண்டது. சூப்பர் 8 போட்டிகளுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களுக்கு இந்தியா வந்தபோது, பேட்டிங்கில் தனது மாற்று முகத்தையும் காட்ட தயங்கவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோகித் ஆடிய ருத்ர தாண்டவம், கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல். அகமதாபாத்தில் எந்த ஆஸ்திரேலிய அணி, இந்தியாவிடம் இருந்து கோப்பையை தட்டிப் பறித்ததோ, அதே அணியை வீட்டுக்கு அனுப்பியே தீருவேன் என்கிற லட்சியத்தோடு இந்திய அணி விஸ்வரூபம் எடுத்தது.

ஆப்கானிஸ்தானும் அதற்கு பக்கப்பாட்டு பாட, சூப்பர் 8 சுற்றோடு ஆஸ்திரேலியாவின் கனவு தகர்ந்தது. அரையிறுதிப் போட்டியில் கடந்த முறை இங்கிலாந்து அணியோடு மோதி காயம்பட்ட இந்திய அணி, இம்முறை அதையும் பழி தீர்த்துக் கொண்டது. பிரிட்ஜ் டவுனில் நடந்த இறுதிப்போட்டியிலும் தொடக்கத்தில் விக்கெட்டுகள் விழ, காற்று தென்னாப்பிரிக்கா பக்கமே வீசியது. தனது கடைசி டி20 போட்டியில் விளையாடிய விராட் கோலி, அக்சர் பட்டேலோடு இணைந்து ஓரளவுக்கு இந்திய அணியை தற்காத்து, கவுரவமான ஸ்கோர் அடிக்க உதவினார்.

இந்த மைதானத்தில் 177 ரன்கள் இலக்கு என்பது தென்னாப்பிரிக்கா அணிக்கும் எளிதாகவே தென்பட்டது. அவர்களது அதிரடி ஆட்டமும் 15வது ஓவர் வரை அப்படியே அமைந்தது. 30 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை என்கிற சூழலில், இந்திய பவுலர்கள் மாயாஜால பந்துவீச்சை கையில் எடுத்தனர். இந்த உலகக் கோப்பை முழுவதுமே இந்திய அணியின் மீட்பராக செயல்பட்ட பும்ரா மற்றும் அர்ஷ்தீப்சிங், பாண்டியா ஆகியோரது கலக்கல் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா அணி தன் கையில் கிடைத்த கோப்பையை, இந்தியா பக்கம் தாரை வார்த்துவிட்டுச் சென்றது.

கடந்த 2007ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய அணி தற்போது மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையில் கிடைத்துள்ள இந்த வெற்றி, இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலனாகும். உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோல்வி, உலகக் கோப்பை ஒருநாள் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வி என இந்திய அணி தொடர்ச்சியாக இறுதிப்போட்டியில் தோற்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது. தற்போது உலகக் கோப்பை டி20 இறுதிப்போட்டியில் பெற்ற வெற்றி, இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.

மேலும் இந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் இந்திய அணி கோப்பையை முத்தமிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.20.42 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பிரதமர், ஜனாதிபதி, தமிழக முதல்வர் என பல தலைவர்களின் வாழ்த்து மழையில் இந்திய அணி நனைகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களும், கோப்பையை வென்ற வீரர்களை தலையில் வைத்து கொண்டாடுகின்றனர். வெற்றிகள் தொடரட்டும்.

Related posts

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா: முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார்