திரிஷா உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகானுக்கு அவகாசம்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துகள் தெரிவித்ததாக, நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை திரிஷா, நடிகை குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்திற்காகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த அபராத தொகையை 2வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி அதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டுமென்று டிசம்பர் 22ம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மன்சூர் அலிகான் தரப்பில், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால், பெருந்தொகையான ஒரு லட்ச ரூபாய் அபராத தொகையை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, ஒருவரைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது அதன் மூலம் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி அபராத தொகையை செலுத்துவதற்கு மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related posts

நாகை மாவட்டம், தோப்புத்துறை அருகே நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களிடையே மோதல்

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மஜக தலைவர் தமிமுன் அன்சாரி வாழ்த்து

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட தற்போது 5% குறைந்துள்ளது: டிஜிபி அலுவலகம் அறிக்கை