திரிபுராவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 17 லட்சம் பேர் பாதிப்பு: வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: திரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திரிபுரா மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவுக்கும் வழிவகுத்தது. கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவில் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எட்டு மாவட்டங்களிலும் உள்ள 450 நிவாரண முகாம்களில் சுமார் 65,500 பேர் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், திரிபுரா மாநிலத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசின் பங்காக ரூ.40 கோடியை முன்பணமாக விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், ராணுவம், இந்திய விமானப் படையின் 4 ஹெலிகாப்டர்கள் ஆகியவை ஏற்கனவே மாநில அரசுக்கு உதவி வருகின்றன.திரிபுராவில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இந்த கடினமான காலங்களில் மோடி அரசு அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடுவதைக் காண்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts

மிசா காலத்திலேயே நாங்கள் பயப்படாதவர்கள் திமுக எந்த மிரட்டலுக்கும் பயப்படக்கூடிய கட்சி அல்ல: அமைச்சர் ரகுபதி பதிலடி

மீனவர்கள் ஸ்டிரைக்

ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி