பயணங்கள் தொடரட்டும்

2021, மே 7ம் தேதி தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று, அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திலும் மாதம் ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாவதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாள் ஒன்றுக்கு சுமார் 39 லட்சம் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கின்றனர். இதுவரை சுமார் 200 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசு போக்குவரத்துத்துறை தரும் தகவல் ஆச்சரியமளிக்கிறது. கூலித்தொழிலுக்காக வெளியூருக்கு செல்லும் பெண்கள், பயணங்களில் மட்டுமே பெருந்தொகையை செலவிட்டு வந்தனர். தற்போது அந்த தொகை பெருமளவில் மிச்சப்படுகிறது. அதுமட்டுமின்றி கூடுதலான இடங்களுக்கும் சென்றும் பணியாற்றி வருகின்றனர். இதனால் தங்களது குடும்பத்தேவைகளை சிரமமின்றி எதிர்கொள்கின்றனர்.

திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசு என்பதற்கு இதுபோன்ற திட்டங்களே சாட்சியங்களாக நிற்கின்றன. சமீபத்தில் பொறுப்பேற்ற கர்நாடக காங்கிரஸ் அரசும் அம்மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பயணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றொரு அறிவிப்பை வெளியிட்டு மக்களின் மனதை மகிழ வைத்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பயணிக்கும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இனி கட்டணம் இல்லை என்ற அரசாணையை நேற்று வெளியிட்டுள்ளது. அரசாணையில், அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லை. மாவட்ட விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கான அரை டிக்கெட் அனுமதி என்பது தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, அரசு பேருந்துகளில் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இலவச பாஸ் மூலம் பயணித்து வருகின்றனர். புதிய அரசாணை மூலம் குடும்பத்தினர் மேலும் பயன் பெறுவர். குடும்ப சேமிப்பு மேலும் பெருகும். மக்களின் நலன் கருதி ஒவ்வொரு திட்டங்களையும், அறிவிப்பையும் செய்து வருவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது திராவிட மாடல் அரசு.

மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்நிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார். கடந்தாண்டு ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்று வந்தவர், தற்போது சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை மற்றும் அடுத்தாண்டு ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுப்பதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். வேலைவாய்ப்புகளும் பெருகும். ஏற்கனவே போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல லட்சம் பேர் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மக்களின் பயண நலன் மற்றும் அவர்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் திமுக அரசின் சாதனை பயணங்கள் மென்மேலும் தொடரட்டும்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு