திருச்சியில் பஸ் ரேஸ் ரயில்வே ஊழியர் சாவு: டிரைவருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்

திருச்சி: திருச்சியில் தனியார் பஸ்கள் இடையே நடந்த போட்டியில் பேருந்து தாறுமாறாக ஓடி மோதியதில் சாலையில் நடந்து சென்ற ரயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்து வழக்கம் போல் நேற்று காலை 7 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு தனியார் பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் ஓட்டி வந்தார். தலைமை தபால் நிலையம் வரும் போது ஜங்ஷன் நோக்கி சென்ற மற்றொரு தனியார் பேருந்துடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சென்றது.

ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது சுந்தராஜன் ஓட்டி வந்த பேருந்து சாலையில் தண்ணீர் குடத்துடன் நடந்து சென்ற ரயில்வே ஊழியரான மோகன் (35) என்பவர் மீது மோதி, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் முகப்பில் இருந்த டிராபிக் லைட் போஸ்ட் மீது மோதி நின்றது. இதில் ரயில்வே ஊழியர் மோகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டிராபிக் போஸ்ட் மற்றும் பெட்ரோல் பங்க் விளம்பர பலகை சேதமானது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள், பஸ் டிரைவர் சுந்தர்ராஜனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் ஆத்திரம் அடங்காத அவர்கள், பஸ் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கண்டோன்மென்ட் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து தனியார் பேருந்து டிரைவர் சுந்தர்ராஜனை (41) கைது செய்ததோடு, பேருந்தையும் பறிமுதல் செய்தனர்.

Related posts

புதிய பாட்டிலில் பழைய மது… புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டி செல்லமேஸ்வர் கடும் விமர்சனம்

புதுவண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது தகரம் விழுந்து 3 பேர் காயம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.54,080க்கு விற்பனை