திருச்சி அருகே உப்பாற்றில் வெள்ளத்தால் தற்காலிக பாலம் உடைந்தது: போக்குவரத்து துண்டிப்பு


லால்குடி: திருச்சி அருகே உப்பாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தற்காலிக பாலம் உடைந்தது. போக்குவரத்து துண்டிப்பால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நகர் கிராமம் மற்றும் நெய்குப்பை தர்மநாதபுரம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் உப்பாற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்த வழியாக தர்மநாதபுரம், மகிழம்பாடி, புரத்தாக்குடி, ஆர்.வளவனூர் ஆகிய கிராம மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த தரைப்பாலத்தில் ஆங்காங்கே ஓட்டை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நாள்தோறும் அச்சத்துடன் சென்று வந்தனர்.

இதனால் இங்கு ஒரு புதிய உயர்மட்ட பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில், உப்பாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால், புதிய பாலத்தின் மேற்கே ஆற்றில் சிமெண்ட் குழாய்களை வைத்து தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக உப்பாற்றில் அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால், உப்பாற்றில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தை நேற்று தண்ணீர் அடித்து சென்றது.

இதன் காரணமாக, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உப்பாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Related posts

20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

மதுரவாயலில் ஷவர்மா சாப்பிட்டதால் பள்ளி ஆசிரியை உயிரிழப்பா..? போலீசார் விசாரணை

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார்; உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு