திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு!

திருச்சி: திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற பயணிகள் ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்துக்கு சென்றபோது எஞ்சினில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. எஞ்சினில் இருந்து புகை வெளியேறியது கண்டறியப்பட்டவுடன் பயணிகள் உடனடியாக கீழே இறக்கிவிடப்பட்டனர். திருச்சியில் இருந்து தஞ்சாவூர், திருவாரூர் வழியாக காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் இன்று காலை 8.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டது.

காலை 9 மணிக்கு திருவெறும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தபோது, ரயிலின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறியது. இதைக் கவனித்த டிரைவர் உடனடியாக ரயிலில் இருந்து பயணிகளை இறக்கிவிட்டார். பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

தீ விபத்தை அடுத்து பயணிகள் அனைவரும் பின்னால் வந்த வேளாங்கண்ணி சிறப்பு ரயிலில் பயணத்தை தொடர்ந்தனர். பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியேறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

பாம் பீச்சில் விளையாடிக் கொண்டிருந்த போது டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் அதிரடி கைது

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது