திருச்சி மாவட்டத்தில் போர்வெல் பாசனத்தில் சம்பா சாகுபடிக்காக நாற்று விடும் பணி தீவிரம்

*விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பாரம்பரிய நெல் விதைகள்

திருச்சி : மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிந்ததாலும், காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுத்து வரும் நிலையிலும், ஒரு வழியாக மாநிலம் முழுவதும் குறுவை சாகுபடி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்பதை உறுதிபடுத்த முடியாமல், ஆற்றுப்பாசனத்தில் சம்பா சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நாற்றுவிடும் பணியை துவங்காமல் காத்திருக்கின்றனர். இருப்பினும் மாநிலம் முழுவதும் போர்வெல் பாசனத்தில் சம்பா நடவு செய்ய நாற்றுவிடும் பணி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்திலும் தற்போது குறுவை சாகுபடி நிறைவடைந்து போர்வெல் பாசனத்தில் சம்பா சாகுபடி மேற்கொள்ள நாற்றுவிடும் பணி தீவிரமடைந்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லுார் வட்டாரங்களில் வழக்கமாக குறுவை, சம்பா, நவரை என பல்வேறு பட்டங்களிலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. நடப்பாண்டு லால்குடி வட்டாரத்தில் மட்டும் 10 முதல் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்வதற்காக நாற்றுவிடும் பணி நடந்து வருகிறது.

இதற்காக வேளாண் துறை வேளாண்மை விரிவாக்க மையங்கள் வாயிலாக திருச்சி-3, ஆடுதுறை-54, டிகேஎம்-13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாகவும், விவசாயிகளை பரவலாக பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வைப்பதற்காகவும் ‘நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின்’ கீழ் பாரம்பரிய நெல் ரக விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 145 நாட்கள் வயது கொண்ட செங்கல்பட்டு சிறுமணி, 135 நாட்கள் வயதுடைய ஆத்துார் கிச்சடி சம்பா, 130-135 நாட்கள் வயதுடைய துாயமல்லி போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் இத்திட்டத்தின் வாயிலாக 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஓர் ஏக்கருக்கு தேவையான 20 கிலோ நெல் விதை வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ விதைக்கு ₹.25 வீதம் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.

சம்பா சாகுபடி நாற்றாங்காலுக்கு தேவையான உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போபாக்டீரியா மற்று்ம் துத்தநாகத்தை கரைத்து வழங்கும் உயிர் உரமான சிங்க் பேக்டீரியா ஆகியனவும், உயிரியல் காரணிகளான சூடோமோனோஸ், ப்ளூரோஸன்ஸ் ஆகியனவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் நாற்றாங்காலில் தோன்றும் குறுத்துப்பூச்சி தாக்குதல்களை கண்கானித்து அழிக்க வேளாண் துறையினர் ஆங்காங்கே இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து, கண்காணித்து, குறுத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கும்
பணியையும் மேற்கொண்டுள்ளனர்.

சூடோமோனோஸ் உயிர் உரத்தை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்யும் முறை குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உயிர் உரம் கொண்டு விதை நேர்த்தி செய்வதுடன், நாற்றுவிட்ட ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் 20 கிலோ மண்புழு உரத்துடன் திரவ வடிவிலான அசோஸ்பைரில்லம் அரை லிட்டர், பாஸ்போபாக்டீரியா அரை லிட்டர், சூடோமோனோஸ் ஒரு கிலோ கலந்து நாற்றாங்களில் தெளிக்கும் புதிய தொழில்நுட்ப முறை விவசாயிகளிடையே வேளாண் துறையால் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் தரமான, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட நாற்றுகள் கிடைக்கும் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.

மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கம்

பாரம்பரிய நெல் ரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாகவும், விவசாயிகளை பரவலாக பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்ய வைப்பதற்காகவும் ‘நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின்’ கீழ் பாரம்பரிய நெல் ரக விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் 145 நாட்கள் வயது கொண்ட செங்கல்பட்டு சிறுமணி, 135 நாட்கள் வயதுடைய ஆத்துார் கிச்சடி சம்பா, 130-135 நாட்கள் வயதுடைய துாயமல்லி போன்ற பாரம்பரிய நெல் ரகங்கள் இத்திட்டத்தின் வாயிலாக 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஓர் ஏக்கருக்கு தேவைவயான 20 கிலோ நெல் விதை வழங்கப்படுகிறது. இதில் ஒரு கிலோ விதைக்கு ₹.25 வீதம் விவசாயிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்