திருச்சி உலக மீட்பர் பசிலிக்காவில் 1,250 கிலோ களிமண்ணில் 7 அடி உயர இயேசுவின் திருவுருவ முகம்: புனித வியாழன் தினத்தில் கிறிஸ்தவர்கள் தரிசித்து உருக்கம்

திருச்சி: திருச்சி உலக மீட்பர் பசிலிக்காவில் புனித வியாழன் தினத்தில் அமைக்கப்பட்டு இருந்த 1,250 கிலோ களிமண்ணில் 7 அடி உயர இயேசுவின் திருவுருவ முகத்தை ஏராளமான கிறிஸ்தவர்கள் உருக்கத்துடன் தரிசித்து சென்றனர். கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இயேசு கிறிஸ்து உயிர்த்த விழாவை கொண்டாடும் முந்தைய வாரத்தை புனிதவாரமாக அனுசரிக்கின்றனர். அதன்படி கடந்த 2ம் தேதியான ஞாயிறு குருத்தோலை தினமாக அனுசரிக்கப்பட்டது. இயேசுகிறிஸ்து குருத்துவம், நற்கருணையை ஏற்படுத்திய நாளாக கருதப்படும் புனித வியாழனான நேற்று இரவு அனுசரிக்கப்பட்டது.

திருச்சி பாலக்கரை எடத்தெரு உலக மீட்பர் பசிலிக்காவில் திருத்தல அதிபர் ரெக்ஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. 7அடி உயர இயேசுவின் திருவுருவ முகத்தினை 1,250 கிலோ அளவிலான களிமண்ணால் பிரமாண்டமாக செய்யப்பட்டு பொதுமக்கள் தரிசிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட ஏராளமான கிறிஸ்தவர்கள், இயேசுவின் திருவுருவ முகத்தினை கண்டு தரிசித்தனர்.இதுகுறித்து திருத்தல அதிபர் ரெக்ஸ் கூறியதாவது: களிமண்ணால் அமைக்கப்பட்ட இயேசுவின் திருவுருவ முகத்தினை ஓவியர் பிரான்சிஸ் தலைமையிலான சீடர்கள் குழுவினர் கடந்த 28 நாட்கள் இரவு பகலாக அமைத்தனர்.

வேறு எந்த திருத்தலத்திலும் இல்லாத வகையில், குருத்தவம், திவ்ய நற்கருணை ஏற்படுத்திய நாளாக கருதப்படும் புனித வியாழனில் இயேசுவின் திருவுருவம் 3 நாட்கள் தரிசிக்கும் வகையில் இந்த திருத்தலத்தில் வைக்கப்படும் என்றார். இயேசுகிறிஸ்து சிலுவையை சுமந்து சென்று உயிர்விட்ட தினமான இன்று (7ம்தேதி) இரவு புனித வெள்ளி கடை பிடிக்கப்படுகிறது. வரும் 9ம் தேதி இயேசுகிறிஸ்து உயிர்ப்பு தினமாக ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது.

Related posts

ராஜேஷ் லக்கானி படத்தை தவறாக பயன்படுத்துவதாக புகார்!!

சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி..!!

போலே பாபாவின் ஆன்மிக கூட்டத்தில் நடந்த உயிரிழப்புகளுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம்: விசாரணை குழுவின் அறிக்கையில் தகவல்