அடிப்படை வசதிகள் இல்லை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க பழங்குடி கிராமத்தினர் முடிவு

மார்த்தாண்டம் : கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆதிவாசி பழங்குடியின கிராமங்கள் உள்ளன. அந்த வகையில் தோட்டமலை சேப்பன்குழி பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறு சிறு குடில்கள் அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு போக்குவரத்துக்காக போடப்பட்டுள்ள சாலை வழியாகவே மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அத்தியாவசிய பொருட்கள் வாங்க பேச்சிபாறை குலசேகரம் போன்ற நகர் பகுதிக்கு செல்ல முடியும்.

இந்த சாலையில் பல ஆண்டுகளாக எந்தவித சீரமைப்பு பணிகளும் செய்யவில்லை. இதனால் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை இருந்த இடமே தெரியவில்லை. குண்டும் குழியுமாக காட்டுவழி பாதைபோல் மாறிவிட்டது. ஆட்டோ, கார் உள்பட வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் நோயாளிகளை 5 கிலோ மீட்டர் தூக்கி கொண்டு நடந்து சென்றே மருத்துவமனைக்கு செல்லும் சூழல் உள்ளது.

பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் தினமும் 5 கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. கரடி, பன்றி, யானை உள்பட காட்டு விலங்குகள் அடிக்கடி வாழை, மரவள்ளி கிழங்கு உட்பட விவசாய நிலங்களை குறிவைத்து சேதப்படுத்தி வருகிறது. ரப்பர் விவசாயம் செய்தபோது ஒக்கி புயலின் தாக்கத்தால் மரங்கள் சாய்ந்தன. அதன்பிறகு மீண்டும் மரம் நடமுடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் அவர்களது வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சியினர் இங்குவந்து பல வாக்குறுதிகளை அள்ளிவீசுகின்றனர். ஆனால் வழக்கம்போல் வெற்றிக்கு பிறகு இந்த கிராமத்தை கண்டு கொள்வதில்லை என்று கிராமவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் வரை எவ்வித தேர்தலையும், குறிப்பாக தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையும் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு