உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த 9 பழங்குடியின மாணவ, மாணவியர்

சென்னை: தமிழ்நாடு பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாமலை கூறியதாவது: தமிழ்நாட்டில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் உயர்கல்வியை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, நாட்டின் முதன்மை உயர்கல்வி நிலையங்களான இந்திய தொழில் நுட்பக் கழகம், தேசிய தொழில் நுட்பக் கழகம்(என்ஐடி), தேசிய ஆடை வடிவமைப்பு கழகம்( என்ஐஎப்டி), இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (ஐஎம்யு), தேசிய சட்டப் பல்கலைக் கழகம்(என்எல்யு), தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிலையங்களில் படிக்க ஜெஇஇ, சியுஇடி, என்ஏடிஏ போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளிகளில் படித்த 225 மாணவ-மணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றுகளை வழங்கினார்.

அந்த 225 அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கான பாராட்டு விழா சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் கடந்த 9ம் தேதி நடந்தது. மேற்கண்ட மாணவ மாணவியரில் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படித்த 9 பேர், நாட்டின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு மாணவியான எம்.பூமிகா கூறும் போது, பொறியியல் படிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ஆனால் அது இப்போது நடந்துள்ளது. மேலும், ஜெஇஇ போன்ற நுழைவுத் தேர்வில் கலந்து கொள்வது முதல் உயர் படிப்புக்கு நல்ல கல்லூரியைத் தேர்வு செய்வது வரையில், ஆசிரியர்கள் தனக்கு உதவினர். இவ்வாறு அந்த மாணவி தெரிவித்தார்.

மேலும், திருச்சி என்ஐடியில் சேர்ந்த மாணவர்களில் ஒருவரான ஏலகிரியை சேர்ந்த மாணவர் ராஜேஷ் கூறுகையில், ‘‘வழக்கமான வகுப்பு நேரத்தைவிட ஆசிரியர்கள் கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடம் நடத்தினர்என்றார். இது குறித்து தமிழ்நாடு பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாமலை கூறியதாவது: மாநிலப் பாடத்திட்டத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் கடந்த ஆண்டுகளை விட பழங்குடியின மாணவர்கள் தேர்ச்சி பெறும் வீதம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் 1551 பேர் தேர்வு எழுதியதில் 94.71 சதவீதம் பேர் இந்த ஆண்டில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், உயர்சிறப்பு கல்வி நிறுவனங்களில் 100 மாணவ மாணவியரை சேர்ப்பதே நோக்கமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, தேர்ச்சி சதவீதம் 84.49 சதவீதமாக தற்போது இருக்கிறது. இந்த ஆண்டு 5 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று நாங்கள் இலக்கு வைத்துள்ளோம் என்றார்.

Related posts

சென்னை மாநகராட்சி பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம்

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, துணை மேயர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

வாக்குச்சாவடிக்கு செல்ல முயன்ற காங். மாஜி முதல்வர் சிறை வைப்பு: உத்தரகாண்ட் காவல் நிலையத்தில் பரபரப்பு