பழங்குடி, பட்டியலின மாணவர்களுக்கான திட்டத்தில் பெரியார் பல்கலை.யில் ரூ.2.50 கோடி முறைகேடு: அறிக்கை தர பழங்குடியினர் நல ஆணையம் கடிதம்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ரூ.2.50 கோடி முறைகேடு புகாரில் எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தரும்படி பழங்குடியினர் நல ஆணையம் போலீசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நியமனம், கொள்முதலில் ஏராளமான முறைகேடுகளும், ஊழல்களும் நடந்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே பல்கலைக்கழகத்தில் படித்த நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், ‘சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, இலவசமாக கணினி சார் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதற்காக மத்திய அரசின் தீனதயாள் உபாத்யாய திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடி நிதி பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டது. அந்நிதியை கொண்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான உபகரணங்கள், மாணவர்களுக்கான உறைவிடம், உணவு, வேலைவாய்ப்பு பயிற்றுநருக்கான ஊதியம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

முதற்கட்டமாக ரூ.1.25 கோடியை பெரியார் பல்கலைக்கழகம் பெற்றது. இதனிடையே, முதலில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த பயிற்சியை வழங்குவதாக கூறிவிட்டு, பின்னர் சாதாரண 3டி பயிற்சியில் சேர்த்தனர். இதேபோல் பல வழிகளில் மாணவர்களை ஏமாற்றினர். குறிப்பாக தரமில்லா உணவு, மோசமான தங்குமிடம், போலியான இன்டர்ன்ஷிப் பயிற்சி மற்றும் பணியாணை என அடுத்தடுத்து மோசடி செய்தனர். மேலும் சாதி ரீதியிலும் புறக்கணிப்பிற்கு ஆளானோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க துணைவேந்தர், அப்போதைய பொறுப்பு பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேசமயம், இந்த மோசடி குறித்து, கடந்த 6 மாதத்திற்கு முன்பு, சேலம் மாநகர போலீசில் புகார் அளித்தும் விசாரணை மேற்கொள்ளப்படவில்லை’ என தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் தற்போதைய நிலை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய விசாரணை செய்து, வரும் 30ம் தேதிக்குள் அதன் அறிக்கைகயை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இத்திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பெரியார் பல்கலைக்கழக அதிகாரிகள் பீதியில் உள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்