Saturday, July 6, 2024
Home » 4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து, உலக சாதனை: வனத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் தகவல்

4 மணி நேரத்தில் 6.40 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து, உலக சாதனை: வனத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் தகவல்

by MuthuKumar

இடையன்கோட்டையில் வெறும் நான்கு மணி நேரத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தின் கீழ் மரங்கள் நடுவதற்கு பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளிடமிருந்து சுமார் 5000 கோரிக்கைகள் 15.16 இலட்சம் மரக்கன்றுகள் தேவை என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின்கீழ் வழங்கப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது:
ஐந்திணைகளில் ஒன்றான காடும், காடு சார்ந்த முல்லை நிலத்தை பாதுகாக்கும் தமிழ்நாடு அரசின் வனத்துறை மானியக் கோரிக்கையின் எனது பதிலுரையை ஆற்றுவதில் பெருமையடைகிறேன்.

காவிரி/ தென்பெண்ணை /பாலாறு தமிழ் கூறும் வைகை /பொருநை நதி என மேவிய ஆறுகள் பல ஓட திருமேனி செழித்த தமிழ்நாடு!
என்று பாரதி போற்றிப் பாடிய தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் எல்லா நதிகளுக்கும் ஊற்றுக் கண்ணாய் விளங்குவது வனங்களேயாகும். ஆறுகளின் நீரோட்டம் சுனைகளில் தொடங்கி, சிற்றாறாகி, காட்டாறாகி, அகண்ட ஆறாகி பின் குறுகி ஓடையாகி, சிற்றோடையாகி மண்ணுக்குள் நீர் வளத்தைப் பெருக்கி கடல் கலக்கும். ஆறுகள் ஓடிய வழியெல்லாம்
நீர்வளம் செழித்திருக்கும், கிணறுகள் வற்றாதிருக்கும், பாசனங்கள் பழுதுபடாது வேளாண்மை நல்ல மகசூல் தரும்.

வனங்களே நீர் வளத்தின் ஆதாரம், வனங்களை வளமாய் பாதுகாத்தால், நமது நீர்வளம் செழிப்படையும், வேளாண்மை வளமடையும்.

ஒரு நாடு வளமாக இருக்க வேண்டுமென்றால், அங்கு வளமான காடுகள் இருக்க வேண்டும். அந்த காடுகளையும் அதை சார்ந்து இருக்கும் பல்லூயிர்களையும் காப்பதே அந்த நாட்டு மக்களின் தலையாய கடமை ஆகும். இந்திய அரசியலை தீர்மானித்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வாழ்ந்த நம் கோபாலபுரம் இல்லத்தில் பல்வேறு பொன்மொழிகள் இடம் பெற்றிருக்கும். அவ்வகையில் வீட்டின் நுழைவு வாயிலிலேயே இடம் பெற்றிருக்கும் பொன் மொழிதான் “மரத்தை நாம் வளர்த்தால் மரம், நம்மை வளர்க்கும்!” என்னும் பொன்மொழி.

இதிலிருந்தே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மரம் மற்றும் காடுகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பற்றி நாம் அனைவரும் அறிய முடிகிறது. அதேபோல், நம் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சரும், ஒவ்வொரு துறையிலும் தொலைநோக்கு பார்வையோடு பல முன் உதாரணமான திட்டங்களை கொண்டு வந்ததுபோல், நம் வனத்துறையிலும் பல முன்மாதிரி திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அந்த திட்டங்களில் அடுத்த தலைமுறைக்கான மிக உன்னத திட்டம் தான் பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission).

தமிழ்நாட்டில் தற்போதைய அறிவிக்கப்பட்ட வனப்பகுதி (Recorded Forest Area) 22,418 சதுர கிலோ மீட்டர். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 17.24 சதவீதம் ஆகும். வனப்பகுதி மற்றும் வனப்பகுதிக்கு வெளியே உள்ள பசுமை பரப்பை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் மொத்த பசுமை போர்வை (Green Cover) 30,843 சதுர கிலோ மீட்டர் ஆகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 23.71 சதவீதம் ஆகும். இதனை, 33 சதவீதமாக உயர்த்துவதற்கு கூடுதலாக 12,076 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், பத்து வருடங்களில் 260 கோடி மரங்கள் நட்டு வளர்ப்பதற்கு நமது முதலமைச்சரால் பசுமை தமிழ்நாடு இயக்கம்(Green Tamil Nadu Mission) எனும் மாபெரும் திட்டம் 24.9.2022 அன்று தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தை துவக்கி வைக்கும்போதே முதலமைச்சர் கூறியதாவது,
“கடைசி மரமும் வெட்டப்பட்ட பின்னர்தான், கடைசி ஆறும் நஞ்சுகளால் நிரப்பப்பட்ட பின்னர்தான், கடைசி மீனும் பிடிக்கப்பட்ட பின்னர்தான், பணத்தை சாப்பிட முடியாது என்பதை நீங்கள் உணர்வீர்கள்” என்ற அமெரிக்க செவ்விந்தியர்களின் பொன்மொழியை சுட்டிக்காட்டி அந்த நிலைமை ஒருபோதும் நமக்கு வரக்கூடாது என்று வலியுறுத்தி வனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், நமது முதல்வர் தனது 70வது பிறந்தநாள் விழாவில் கூட தனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கி, மரம் வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த திட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அமைச்சர் அண்ணன் சக்கரபாணி ஏற்பாட்டில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி முன்னிலையில், இடையன்கோட்டையில் வெறும் நான்கு மணி நேரத்தில் 6 இலட்சத்து 40 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்து, உலக சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை நிகழ்ச்சியில் நமது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி மரக்கன்றை நட்டு தன்னையும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துக்கொண்டு, அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக திகழ்ந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் மரங்கள் நடுவதற்கு பொதுமக்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளிடமிருந்து சுமார் 5000 கோரிக்கைகள் 15.16 இலட்சம் மரக்கன்றுகள் தேவை என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின்கீழ் வழங்கப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

இந்த இயக்கத்தின் மூலம் முதலமைச்சர் நம் அனைவரிடமும் எதிர்பார்ப்பது, எல்லா காலியிடங்களிலும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதும், ஒவ்வொருவரும் எத்தனை மரங்கள் வளர்க்க இயலுமோ அத்தனை மரங்களை வளர்க்க முன்வரவேண்டும் என்பதே ஆகும்.

இந்த தருணத்தில் அனைத்து அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள், அனைவரும் அவரவர்களின் மாவட்டத்தில் பல மரக் கன்றுகளை நட்டு, அனைவரும் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு, முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கம் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

You may also like

Leave a Comment

eight − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi