4 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

மீனம்பாக்கம்: கவர்னர் ஆர்.என்.ரவி, 4 நாள் பயணமாக இன்று காலை விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். வரும் 15ம் தேதி இரவு சென்னை திரும்புகிறார். கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த வாரம் 2 நாள் பயணமாக டெல்லிக்கு சென்று விட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில் மீண்டும் 4 நாள் பயணமாக இன்று காலை 10.05 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். வரும் 15ம் தேதி இரவு 11.30 மணிக்கு, ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை திரும்புகிறார்.

கவர்னருடன், அவரது செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றனர். கவர்னர் டெல்லி பயணத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி, கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. சொந்த பயணமாக டெல்லி செல்கிறார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. மேலும் கவர்னருக்கும் மாநில அரசுக்கும் இடையே, சில கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக நீட் தேர்வுக்கு ஆதரவாக கவர்னர் தொடர்ந்து பேசி வருவது, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரின் நிலைப்பாடு, ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு புதிய பொறுப்பு வழங்கக்கூடிய கோப்பில் இதுவரை கையெழுத்து இடாதது போன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று, பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்து விட்டு வந்தார். இந்நிலையில், கவர்னர் இன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும்: ஆந்திர அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு