போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான அடுத்த கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதி நடைபெற உள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட 6 கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற வழிகாட்டுதல் படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பிப்ரவரி 6ஆம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.

எனவே, இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று இன்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கொடுத்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையை ஒத்திவைக்க ஒப்புக் கொண்டனர். போக்குவரத்துத் தொழிலாளா்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனா். இது தொடா்பான சமரச பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, ஜன.9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி, ஜன.19 வரை வேலைநிறுத்தத்தை ஒத்திவைப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, ஜன.19-ஆம் தேதி நான்காம் கட்ட பேச்சுவாா்த்தைக்கு வரும்படி தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளா் நலத் துறை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இப்பேச்சுவாா்த்தை இன்று அம்பத்தூா் மங்களாபுரத்திலுள்ள தமிழ்நாடு தொழிலாளா் கல்வி நிலையத்தில் பகல் 12 மணிக்குத் தொடங்கியது. இந்தப் பேச்சுவாா்த்தையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், போக்குவரத்துக் கழகங்களின் இயக்குநா்கள், போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தினா் கலந்து கொண்டனர். அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி, அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதிமொழி அளித்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்