போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் பிப்.7ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது: 4ம் கட்ட முத்தரப்பு பேச்சிலும் முடிவு இல்லை

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக நேற்று 4ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. முடிவு எட்டப்படாததால் பிப்.7ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்த வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கின. தொழிலாளார் முன்னேற்ற சங்க பேரவை (தொமுச) தவிர மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டிசை வழங்கின.

இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. டிச.27, ஜன.3, ஜன.8 ஆகிய தினங்களில் 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர் முன்பு ஒருமுறை பேச்சுவார்த்தையும் நடந்தது. அதில் சுமுக உடன்பாடு எட்டப்படாததை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.
இந்நிலையில், வேலை நிறுத்தத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், பொதுமக்களின் நலன் கருதி வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். மேலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஜன.19ம் தேதி (நேற்று) போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று 4ம் கட்ட சமரச பேச்சுவார்த்தை, சென்னை அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடந்தது. தொழிலாளர் தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமை வகித்தார். பேச்சுவார்த்தையில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் மற்றும் இதர போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள் மற்றும் 27 தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாட்களுக்கு வேலையில்லை, சம்பளம் இல்லை (No work, No pay) எனவும், பழிவாங்குதல் நடவடிக்கை எதுவும் இருக்காது, அப்படி எடுக்கப்பட்டதாக நிர்வாக உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால் அதற்குரிய தீர்வு காணப்படும். போக்குவரத்து கழகங்களில் ஏற்படும் வரவு செலவு வித்தியாசத் தொகை அரசு நிதி ஒதுக்குவது, அரசுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும், காலி பணியிடங்களை பூர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாரிசு பணி நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓய்வூதியர் அகவிலைப்படி உயர்வு பிப்.6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்து முடிவெடுக்கப்படும். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பிப்.7ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு