மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன்பு நின்று சென்ற ரயில்கள் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூடுதல் ரயில்கள் இயக்கவும் பயணிகள் வலியுறுத்தல்

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் கொரோனாவிற்கு முன்பு நின்று சென்ற ரயில்கள், தற்போது அந்த ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை. எனவே, அந்த ரயில் நின்று செல்ல சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ரயில் நிலையம் ஆன்மீக பக்தர்கள் தினசரி வந்து செல்ல உதவியாக அமைந்துள்ளது. மேலும், மேல்மருவத்தூர் சுற்றியுள்ள ஒரத்தி, அச்சிறுப்பாக்கம், செய்யூர், சூனாம்பேடு மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் தினசரி வேலைக்கு மற்றும் கல்லூரிக்கு செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.செங்கல்பட்டுக்கு அடுத்தாக மேல்மருவத்தூரில் கூடுதலான ரயில்கள் நின்று செல்கின்றன.

இதனால், கோயிலுக்கு வரக்கூடிய பக்தர்கள், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள், வேலைக்கு, கல்லூரிக்கு செல்ல கூடியவர்களுக்கு அனைவரும் பயன்பெற்று வருகின்றனர்.
கடந்த கொரோனா காலகட்டத்தில் ரயில்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் சேவை தொடங்கிய பிறகு இந்த வழியாக இயக்கக்கூடிய ரயில்களில் ஒரு சில ரயில்கள் இங்கு நிறுத்தப்படுவதில்லை. டெல்டா மாவட்டம் செல்லக்கூடிய உழவன் எக்ஸ்பிரஸ் (இரு மார்கத்திலும்), மேற்கு மாவட்டம் செல்லக்கூடிய சேலம் எக்ஸ்பிரஸ் (இரு மார்கத்திலும்), சிலம்பு எக்ஸ்பிரஸ் (சென்னை மார்க்கத்தில்), காரைக்கால் கம்பன் எக்ஸ்பிரஸ் (சென்னை மார்க்கத்தில்) ஆகிய ரயில்கள் நின்று செல்வது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் இருந்து வரக்கூடிய பயணிகள், செங்கல்பட்டு அல்லது விழுப்புரத்தில் இறங்கி வண்டி மாறி மேல்மருவத்தூர் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோன்று, சென்னையில் இருந்து இயக்கக்கூடிய பகல் நேர ரயிலான வைகை எக்ஸ்பிரஸ், இரவு நேரத்தில் இயங்கக்கூடிய மன்னை எக்ஸ்பிரஸ், பாண்டியன், பொதிகை, ராக்போர்ட் ஆகிய ரயில்கள் நின்று செல்வதன் மூலமாக இந்த ரயில் நிலையத்திற்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பயணிகளின் சிரமத்தையும் தவிர்க்க முடியும். எனவே, எதிர்வரும் காலத்தில் புதிய கால அட்டவணை தயாரிக்கும் நிலையில் உள்ள ரயில்வே நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் மேற்குறிப்பிட்ட ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல நடவடிக்கை எடுத்திட எடுக்க வேண்டும்.

இத்துடன் சென்னை புறநகர் விரிவாக்கம் தற்போது மேல்மருவத்தூர் வரை விரிவடைந்த நிலையில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் மேல்மருவத்தூர் வரை நீட்டிப்பு செய்து இயக்கிட தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. மேல்மருவத்தூர் ரயில் பயணிகள் மற்றும் பக்தர்களின் இந்த கோரிக்கைகளை தென்னக ரயில்வே மற்றும் சென்னை கோட்ட அதிகாரிகள் நிறைவேற்றி தர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

* விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்
மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு உற்பத்தி பயிர்களை பிரதானமாக பயிர் செய்து வந்தாலும், காய்கறி பயிர் செய்வதிலும் ஈடுபடுகின்றனர். கத்தரி, வெண்டை கீரை வகைகள் போன்றவை இவர்களின் கூடுதல் வருமானத்திற்கான பயிர்களாகும். இவற்றினை இந்த மக்கள் தினந்தோறும் அதிகப்படியான வாடகை கொடுத்து லாரிகள் மூலமாக சென்னை கொண்டு செல்கின்றனர். இந்த மேல்மருவத்தூர் ரயில் நிலையம் வழியாக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் குறைந்த செலவில் தங்களின் விலை பொருட்களை சென்னை மாநகர் கொண்டு இவர்களால் விற்பனை செய்ய முடியும்.

* சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
முதியவர்கள், பெண்கள் குழந்தைகள் போன்றவர்களுக்கு வெளியூர் ரயிலில் அமர்வதற்கு சவுகரியமான சீட்கள் கிடைக்கும். இதனால், மருத்துவமனை செல்பவர்களும் பாதுகாப்பான முறையில் சென்று வர முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வெளியூர் ரயில்களால் நேரம் விரயம் மிச்சமாகும். எனவே, வெளியூர் ரயில்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை ைவத்துள்ளனர்.

*
காத்துகிடக்கும் பயணிகள்
இப்பகுதி கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வசதி இல்லாததால் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிப்பது அல்லது இருசக்கர வாகனங்களில் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர். எனவே, மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் பாண்டியன், உழவன், சிலம்பு, கம்பன் உள்ளிட்ட வெளியூர் ரயில்கள் நின்று சென்றால் ரயில் நிலையத்தில் தேவையில்லாமல் பயணிகள் காத்துகிடப்பது தவிர்க்கப்படும். மேலும், உடனுக்குடன் சென்று வர வசதியாகவும் இருக்கும். இதனால், வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.

Related posts

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்