நிக்காம போன ரயிலு… இதுதான் ஒன்றியத்தின் லட்சணம் என்கிறார்: wiki யானந்தா

‘‘ரயில்வே துறை குளறுபடி என்ன..’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘ஒன்றிய அரசின் ரயில்வே துறை இப்படித்தான் இருக்கு என்பதற்கு சிறந்த உதாரணம் அல்வா மாவட்டத்தில் அரங்கேறியிருக்கு. தேசிய கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பல விபத்துக்கள். சமீபத்தில் கூட மேற்கு வங்க மாநிலத்தில் நின்ற ரயில் மீது சரக்கு ரயில் மோதி அப்பாவி மக்களின் பல உயிர்கள் பறிபோனது. எல்லா விபத்துக்களிலும் விசாரணை நடந்தாலும், தொழில்நுட்பம் பெருகி விட்ட போதிலும் நேருக்கு நேர் விபத்துகள் என்பது மனித தவறுகளால் நடக்கிறது. இந்நிலையில் தான் அல்வா மாவட்டத்தில் நடந்த சம்பவம் ரயில்வே துறை எப்படி இருக்கு என்பதை உணர்த்தி இருக்கிறது. அதாவது நெல்லை – மேட்டுப்பாளையம் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். இதற்காக பயணிகளும் டிக்கெட் போட்டு காத்திருந்தனர். ரயில் வரும் திசை நோக்கி பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் இந்தா…… ரயில் வந்து விட்டது, ஏறி விடலாம் என மூட்டை முடிச்சுகளை தூக்கிக் கொண்டு தயாராக இருந்தனர். ஆனால் அங்கு ரயில் நிற்காமல் ‘நான் ஸ்டாப்’ என்பது போல விருட்டென சென்று விட்டது. என்ன என்று கேட்டால் கல்லிடைக்குறிச்சியில் ரயில் நிறுத்தம் வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்து விட்டது. ஆனால் டிரைவருக்கு கொடுக்கும் சார்ட்டில் இந்த ஊரில் நிறுத்தம் என குறிப்பிடவில்லையாம். சரி அது….இருக்கட்டும் நிற்பதற்கான சிக்னலை மீறி ரயில் ஏன் சென்றது?. இப்படி சிக்னலை மீறியும்….. கவனக் குறைவாகவும் செல்வதால் தானே நேருக்கு நேர் விபத்துக்கள் நடக்கிறது என பயணிகள் நலச்சங்கத்தினர் ெகாந்தளிக்கின்றனர். இந்த சம்பவத்தில் 2 டிரைவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு தப்பிக்க பார்க்கிறது ரயில்வே நிர்வாகம். இதில் ஒட்டுமொத்தமாக தவறு செய்த அனைத்து ரயில்வே அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை பாய்ந்தால் மட்டுமே எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள், நேருக்கு நேர் ரயில் விபத்துகளை தடுக்க முடியும் என்கின்றனர் ரயில் பயணிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சத்துணவு திட்டத்துல கை வச்சவங்க, தணிக்கை தொடங்கியதால கலக்கத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல அணை, பாடி என்ற பெயர் கொண்ட ஒன்றியங்கள் உள்பட மாவட்டத்துல சில அரசு மேல்நிலை பள்ளிகள்ல கடந்த கல்வியாண்டுல சத்துணவு திட்டத்துல செய்த வரவு செலவுகளை, சமூக தணிக்கை செஞ்சி, கிராம சபை கூட்டத்துல மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்காங்க.. இதேபோல ஒவ்வொரு வாரமும் மற்ற அரசு பள்ளிகள்லயும் இதுபோல மதிய உணவு திட்டத்துல மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குறதுக்காக வாங்கப்பட்ட அரிசி, முட்டைகள், காய்கறிகள் அதற்கான வரவு செலவு கணக்குகளை சமூக தணிக்கை செய்யப்போறங்களாம்.. இதுவரையில, இந்த திட்டத்துல சமூக தணிக்கை செய்யவில்லையாம்.. இதனால, யாரும் கவலைப்படாம செய்ய வேண்டியதை செஞ்சிக்கிட்டு இருந்தாங்களாம்.. ஆனா, இப்ப தணிக்கை செய்யப்போறதால, கடந்த கல்வியாண்டுல யாரெல்லாம், சமையல் பொருட்கள்ல கை வெச்சாங்களோ அவங்களும், அதுக்கு உடந்தையாக இருந்தவங்களும், எப்ப நம்ம பள்ளிக்கு வந்து தணிக்கை செய்யப்போறங்களோ என்று கலக்கத்துலயும், சிலபேரு, வர்ற அதிகாரிகளை தடபுடலா கவனிச்சு அனுப்பிடலாம்னு பிளான் போட்டு வர்றாங்களாம்.. தடபுடல் கவனிப்பா, தணிக்கை அதிகாரிகள் நடவடிக்கையான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பேரூராட்சி இடத்தை ஆக்கிரமித்து ரொம்ப பந்தா காட்டி வரும் இலைக்கட்சி கவுன்சிலர் பற்றி தெரியுமா..’’ என அடுத்த கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘கோவை புறநகர் பகுதியில் உள்ள பேரூராட்சியில், ராமரின் தம்பி பெயர் கொண்டவர் அதிமுக கவுன்சிலராக இருக்கிறார்.. இவர் அதே பகுதியில் தனியார் பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். இதுதவிர அதிமுகவில் முக்கிய பொறுப்பிலும் இருக்கிறார். இவர், தனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, பள்ளி அருகே உள்ள நீரோடையில் சுமார் 40 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டாராம்.. அதில் கட்டிடமும் கட்டி, கம்பிவேலி அமைத்து விட்டாராம்.. வளைக்கப்பட்ட இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கும்னு சொல்றாங்க.. மேலும் இவர், பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி இருக்கிறாராம். அந்த கட்டிடத்துக்கு வரியும் செலுத்தவில்லையாம்.. அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசுக்கு வருவாய் இழப்புன்னு தொடர்ந்து கெத்து காட்டி வருகிறாராம்.. இந்த ஆக்கிரமிப்பை அதிரடியாக மீட்க, உள்ளாட்சி அமைப்பினர் தயக்கம் காட்டுறாங்களாம்… எந்த அதிகாரியும் துணிச்சலுடன் செயல்படவில்லையாம்.. அதனால், இவர், ரொம்பவே பந்தா காட்டி வருகிறாராம்.. ‘இந்த இடத்தை என்னிடமிருந்து யாரும் பிடுங்க முடியாதுன்னு சவால்விட்டும் வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரரிடம் நல்லபேரு வாங்க தேனிக்காரர் ஆட்களை கட்சியில் இணைப்பதுபோல நம்ப வச்சிட்டாங்களாமே டெல்டா மாஜி அமைச்சர்கள்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோர மாவட்டங்களில் உள்ள தேனிக்காரர் மற்றும் குக்கர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் சமீபத்தில் டெல்டா மாவட்டத்துக்கு வந்திருந்த சேலத்துக்காரர் முன்னிலையில் இலைக்கட்சியில் இணைந்தாங்க…இந்த மாற்று கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சியை மாஜி அமைச்சர்கள் தான் முன்னெடுத்தாங்களாம்… கட்சியில் இருப்பை காட்டி கொள்வதற்காகவும், சேலத்துக்காரரிடம் நல்ல பேரு எடுப்பதற்காகவும் மாற்று கட்சி இணைப்பு நிகழ்ச்சியை மாஜி அமைச்சர்கள் நடத்தியதாக கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிங்க மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது.. கட்சியில் தங்கள் மீதான நம்பிக்கை குறைந்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற மாற்று கட்சி இணையும் பெயரில் நிகழ்ச்சியை நடத்திய மாஜி அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ள மூத்த நிர்வாகிகள், டெல்டாவில் தேனிக்காரருக்கு பெரியளவில் கூட்டம் இருப்பதை போல் சேலத்துக்காரரை நம்ப வைத்து விட்டதாக அவர்களுக்குள் பேசிக்கிட்டாங்களாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம்!!

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டி மிரட்டல்

போலி சான்றிதழ் மூலம் அரசு பணி: 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை