தண்டையார்பேட்டையில் சோகம் வங்கி கடனை கேட்டு ஊழியர்கள் டார்ச்சர் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: மனைவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்து விட்டு விபரீத முடிவு

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை விநாயகபுரம் 1வது தெருவை சேர்ந்தவர் ரகுராமன் (38). ஸ்டீல் பாத்திரங்கள் தயாரிக்கும் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ரகுராமன், கடந்த 5 ஆண்டுக்கு முன் தனியார் வங்கியின் லோன் மூலம் பைக் வாங்கினார். மாதம்தோறும் பணம் சரியான நேரத்தில் கட்டி முடித்துள்ளார். அதனால் அதே தனியார் வங்கி மீண்டும் ரகுராமனை அணுகி, தனிநபர் லோன் வேண்டுமா என கேட்டுள்ளனர். உடனே ரகுராமனும், 2021ம் ஆண்டு தனிநபர் கடனாக ரூ.3 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. 10 மாதங்கள் அசல், வட்டி செலுத்தி வந்துள்ளார். அதன்பிறகு சரியான வேலை இல்லாததால் அசல், வட்டி கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். லோன் வாங்கியபோது திருவொற்றியூரில் வசித்த ரகுராமன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது உறவினர்கள் வசிக்கும் தண்டையார்பேட்டைக்கு குடிவந்துள்ளார். இந்நிலையில், வங்கி ஒப்பந்த ஊழியர்களான நரசிம்மன் (23), மணிகண்டன் (29) ஆகியோர், ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி கடனை செலுத்தும்படி கூறியுள்ளனர்.

அவரும், விரைவில் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். ஆனாலும் கடந்த ஒரு வாரமாக தினமும் காலை, மாலை வேளையில் ரகுராமின் வீட்டுக்கு வந்து பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். ரகுராமன், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் ரகுராமனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலையில் மனைவி வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த ரகுராமன், மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, “வங்கி ஊழியர்களின் செயலால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். குழந்தைகளை நன்றாக பார்த்து கொள். நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். பின்னர், மனைவியின் புடவையால் மின்விசிறி கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் கூறிய தகவலை கேட்டதும் சாமுண்டீஸ்வரி பதறியடித்து கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு கணவர் தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதார்.தகவலறிந்து காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரகுராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து தனியார் வங்கியின் ஒப்பந்த ஊழியர்கள் இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.

Related posts

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு