வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்த வேண்டும்: தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில் 07.10.2023 அன்று சென்னை பெருநகரத்தின் போக்குவரத்து மேலாண்மை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை பெருநகர பகுதிகளில் போக்குவரத்தை சீர்செய்ய எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளின் தொடர்ச்சியாக இன்று (25.10.2023) சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல் மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக வணிக வளாக உரிமையாளர்களுடன் (Mall Owners) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், வணிக வளாகங்களின் வாகன நிறுத்தும் இடங்களை ஒழுங்குபடுத்தவும், தேவைக்கேற்ற வாகன நிறுத்தும் இடங்களை உருவாக்கவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெரிய வணிக வளாகங்கள் முன்பு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அந்தந்த வணிக வளாக உரிமையாளர்களே தேவைக்கேற்ற ஊழியர்களை நியமித்து, குறிப்பாக வணிக வளாகங்களின் முன்பு போக்குவரத்தை சீர்செய்யும் ஊழியர்களுக்கு பிரிதிபளிக்கும் உடைகள் (Reflector Jackets) வழங்கி, போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சென்னை பெருநகரில் உள்ள வணிக வளாகங்களுக்குள் செல்லக்கூடிய வாகனங்கள் நுழைவாயில் (Entry) மற்றும் வெளியே (Exit) செல்லும் பாதையை ஒரே இடத்தில் இல்லாமல், முன்பகுதியில் வாகனங்களின் நுழைவாயிலாகவும் (Entry) மற்றும் பின்பகுதியில் வாகனங்கள் வெளியே செல்லும் படியாகவும் (Exit) வணிக வளாக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல வணிக வளாகங்களுக்கு வரக்கூடிய வாகனங்கள் அதிகமடைந்தால், வணிக வளாக உரிமையாளர்களே தற்காலிக வாகன நிறுத்துமிடம் கண்டறிந்து, சாலையின் முன்பு எவ்வித போக்குவரத்து நெரிசலின்றி வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் இரா. லலிதா, பெருநகர சென்னை காவல் போக்குவரத்து இணை ஆணையர் ந.மா.மயில்வாகனன், முதுநிலை திட்ட அமைப்பாளர் டி.சபாபதி, போக்குவரத்து காவல்துறை அலுவலர்கள் மற்றும் சி.எம்.டி.ஏ அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி