வணிகர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சரிடம் விக்கிரமராஜா மனு அளிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா நேற்று டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத்துறை அமைச்சர், நுகர்வோர்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்தார். ஜி.எஸ்டி பிரச்னைகள், உணவுப்பொருள், டோல்கேட் போன்றவை சம்பந்தமாக விரைந்து தீர்காண வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 2017 முதல் 2021 வரையிலான முதல் 5 வருடங்கள், ஜிஎஸ்டி ஆட்சி மதிப்பீடுகளை புதிய அறிவிப்புகளுடன் மறுமதீப்பீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு எதிரான அபராதம் மற்றும் வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

சிமென்டிற்கு விதிக்கப்பட்ட 28 சதவீதத்தை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும். ரூ.1000-க்கு கீழ் உள்ள அறை வாடகை மீதான ஜிஎஸ்டியில் இருந்து நோய்வாய்ப்பட்ட நோயாளிகள், மாணவர்கள், வணிகர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவின் கீழ் வரும் பயணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும். தனி உணவகங்களில் உணவுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதே சமயம் உணவகங்களின் வாடகை கட்டிடத்திற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தனி உணவகங்கள் மீதான பெரும் வரிச்சுமைகளை தள்ளுபடி செய்திட வேண்டும்.

மாவட்ட அளவிலான வணிக வரி ஆலோசனைக் குழு கூட்டங்கள் மாதந்தோறும் அல்லது காலாண்டு என நடத்தப்பட வேண்டும். வணிகர்களுக்கு ஜிஎஸ்டி குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி மையங்களை உருவாக்க வேண்டும். மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் முன் மேல் முறையீடு மற்றும் சீராய்வு உத்தரவுகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் தொடர்பான 53-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் குறிப்புடன் கூடிய விளக்கங்கள் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 112-ஐ திருத்தம் செய்ய வேண்டும்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி