டிராக்டர் கடனுக்காக விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் பொறி வைத்து தூக்கிய போலீஸ்: 7 மணி நேரம் லுங்கி கெட் அப்பில் காத்திருந்து கைது

சேலம்: சேலத்தில் தாட்கோ மூலம் டிராக்டர் கடன் வழங்க, விவசாயியிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாவட்ட மேலாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். சேலம் அடுத்த சீலநாய்க்கன்பட்டி ஊத்துமலை அருகே, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மானிய கடன்கள் வழங்க நேர்காணல் நடத்தி, பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். இங்கு, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த மணியார குண்டத்தை சேர்ந்த விவசாயி குமார் (42), டிராக்டர் வாங்க கடன் கேட்டு 2 வாரத்திற்கு முன்பு விண்ணப்பித்தார். அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது.

பின்னர் அவருக்கு 50 சதவீத மானியத்தில், டிராக்டர் வாங்க ரூ.7.50 லட்சம் கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக ரூ.15 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என, மாவட்ட மேலாளர் (பொறுப்பு) சாந்தி கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குமார், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் நேற்று குமார், தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்றார். அவருடன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசாரும், லுங்கி அணிந்தபடி வந்தனர். மாவட்ட மேலாளர் சாந்தியிடம் சென்று லஞ்ச பணத்தை குமார் கொடுக்க முயன்றார். அவர், அலுவலக உதவியாளரான மற்றொரு சாந்தியிடம் கொடுக்கும்படி தெரிவித்தார்.

லஞ்ச புகார் கூறப்பட்ட தாட்கோ மேலாளர் சாந்தியை கையும், களவுமாக பிடிக்க, லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாரிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அத்துடன் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சிலர், லுங்கியை அணிந்துகொண்டு, தாட்கோ அலுவலகத்திற்கு நேற்று காலை 10.30 மணிக்கு சென்றனர். மாவட்ட மேலாளர் சாந்தி அலுவலகத்திற்கு வரவில்லை. அவர் மீட்டிங் சென்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேலாளர் சாந்தி வரும் வரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் லுங்கி அணிந்தபடியே சுமார் 7 மணி நேரம் காத்திருந்தனர். மாலை 5.30 மணியளவில், மேலாளர் சாந்தி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவரது உதவியாளரிடம், குமார் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது, லுங்கி போலீசார் மடக்கி பிடித்து இருவரையும் கைது செய்தனர்.

Related posts

ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.!

ஹரியானா சட்டமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!