Toxic ரிலேஷன்ஷிப்பை தள்ளி வை

நன்றி குங்குமம் தோழி “அளவு என்பது உப்புக்கு மட்டுமல்ல உறவுகளுக்கும்தான். கூடினாலும் குறைந்தாலும் குப்பையில்தான்..”தலைநகர் டெல்லியில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் தன்னோடு வாழ்ந்த காதலியை கொடூரமாய் கொன்று, அவரின் உடலை பல துண்டுகளாக்கி, வெவ்வேறு பகுதிகளில் உடல் பாகங்களை வீசிய கொடுரம் குறித்த செய்தி அண்மையில் நாட்டையே உலுக்கியது. காதலி ஷ்ரத்தாவைக் கொன்ற காதலன் அஃப்தாப்பை டெல்லி போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவன் குறித்த பல்வேறு தகவல்கள் செய்தி ஊடகங்கள் வழியே வெளியாகி வருகிறது.ஒரு நபர் தனக்கு உகந்தவன் இல்லையெனத் தெரிந்தும், தனக்கான பாதுகாப்பு குறித்துகூட யோசிக்காமல், பெண்கள் ஏன் தங்களை காதல் என்னும் மாய வலைக்குள் சிதைத்துக் கொள்கிறார்கள்? தெரிந்தே சிக்கலான வாழ்வை ஏன் வாழ்கிறார்கள்? போன்ற கேள்விகளுடன் பெண்கள் மற்றும் குழந்தைகளை மையப்படுத்தி இயங்கிவரும் சிந்தனையாளர்கள் சிலரிடம் பேசியபோது..காயத்ரி மஹதி, மனநல ஆலோசகர், மதுரை.“நீ இல்லைனா என்னால வாழவே முடியாது. நீ போனால் நான் கஷ்டப்படுவேன்” என்பதைச் சொல்லிக் கொண்டே, ஆண், பெண்ணை துன்புறுத்திக் கொண்டிருப்பான். எந்த நேரமும் போதையில் இருக்கின்ற, தண்ணி அடிக்கிற ஆணைக்கூட, அவனின் மனைவி சுலபத்தில் விட்டுவிட்டுச் செல்லமாட்டாள். “குடிச்சாலும் எம் புருஷன் எம்மீது பாசமாத்தான் இருக்கான்” என்கிற பெண்கள் பலரை நாம் இங்கு பார்க்கிறோம். புருஷலட்சணம்  என்பது இங்கே  சம்பாத்தியம். வேலைக்கு போவான். சம்பாதிப்பான். அவனுக்கும் குடும்பம் இருக்கும். இதெல்லாம் அவனுக்கு பெரிய மேட்டரில்லை. ஆனால் மனைவி, காதலி, மகளை அடிப்பதென செயல்படுவான். இங்கே ஆண்களின் அன்பு புரியாது. முழுமையாகவும் வெளிப்படாது. அன்பை வெளிப்படுத்துவது ஆணுக்கு தன்னை மறந்த நிலை. பணம் மட்டுமே சம்பாதிக்கிற விஷயம் கிடையாது. காதல், ரொமான்ஸ், செக்ஸ் என அனைத்துமே இங்கு இயர்னிங் சோர்ஷ்கள்தான். இதைச் சொல்வதற்குத் தயக்கமாகவே இருந்தாலும், இங்கு யாருக்கும் இதை சரியாக செய்யத் தெரிவதில்லை என்பதே நிதர்சனம்.சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்கிற வழக்கு மொழி போல, நம் வாழ்வியல் முறையில் காதல் செய்ய யாரும் யாருக்கும் கற்றுத் தருவதில்லை. கற்றுக் கொள்வதிலும் குழப்பமான மனோநிலையே நிலவுகிறது. வளரிளம் பருவத்தில் யாராவது ஒரு பெண் சிக்கிவிட்டால், இவளை விட்டுவிடக்கூடாது என்கிற மனோநிலைதான் ஒரு இளைஞனிடத்தில் இருக்கிறது. இந்த விஷயத்தில் இளைஞர்கள் இன்னும் அறுபதுகளிலேயே இருக்கின்றார்கள். எனக்கு இந்தப் பெண்ணைத் தவிர இன்னொரு பெண்ணை அட்ராக்ட் செய்யத் தெரியாது என்பது அவனின் எண்ணம் மற்றும் நம்பிக்கையாக இருக்கிறது. குறிப்பாக ஆணிடத்தில் தன்னைப் பற்றிய ஒரு இயலாமை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அவனுக்கே அவன் மீதான நம்பிக்கையற்ற சிந்தனைதான் இது.இப்போது பெண்களின் பக்கம் நின்று பார்த்தால், ஆண் ஒரு பெண்ணை அடிக்கவும் செய்வான்.. அதே பெண் காலில் விழவும் செய்வான்.. இந்த மாதிரியான ஆண்களை பெண்கள் எளிதில் விட்டுவிட்டுப் போகமாட்டார்கள். அதேபோல் ஒரே ஒருத்தனை மட்டும்தான் காதலிக்கணும் என்கிற நம்பிக்கை பெண்களிடம் காலங்காலமாகவே ஜெனடிக்கலாக ஊட்டப்பட்ட விஷயமாக ஊறிப்போயிருக்கிறது. நம் பெண்களுக்கு கம்யூனிகேஷன் ரொம்பவே முக்கியம். அதுவும் காதல் தொடர்பான கம்யூனிகேஷன் கொடுக்கும் ஆண்களை பெண்கள் சுலபத்தில் விட்டுவிட்டுப் போவதில்லை. நான் இவனுக்கு ஒரு தேவதை என்கிற மாயையில் நின்று, அவனை ஒரு ஹீரோவாய் நினைத்து பெண் நம்பும்போது, எவ்வளவு அடிபட்டாலும் அவர்கள் அங்கேயேதான் நிற்கிறார்கள். அதற்குள்ளாகவே சுழல்கிறார்கள். மிகச் சமீபத்தில் நடிகை ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து ஓடிடி தளத்தில் வெளியான “அம்மு” மாதிரி என் அன்பால் அவரைத் திருத்திவிடுவேன் என்கிற பெண்களே இங்கு அதிகம். குடிகாரனையும், ரவுடியிசம் செய்பவனையும் என் உண்மையான அன்பால், காதலால் மாற்றிவிடுவேன் என்பது காலங்காலமாய் சப்கான்சியஷாய் பெண்கள் செய்யும் விஷயமாகவே இருக்கிறது. பெண்களுக்காகவே நாம் கட்டமைத்திருக்கும் கண்ணகியும் சீதையும் இந்த வடிவம்தான். இன்றைய டிஜிட்டல் உலகில் பல விஷயங்கள் ஓப்பனாக வெளியில் தெரியவருகிறது. இதிலிருந்து விழிப்படைந்து பெண் வெளியேற நினைக்கும்போது, டிவோர்ஸ் என்கிற வார்த்தையை அவள் பிரயோகிக்கும்போது ஆண் ஸ்ட்ரெக்காகி நிற்கிறான். பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் முற்போக்கு சிந்தனைகள், ஆணுக்கு இந்த டிஜிட்டல் யுகத்திலும் இல்லை என்றே சொல்லலாம். பெண்களின் அறிவை, வளர்ச்சியை பார்த்து பயப்படும் ஆண்களே இங்க அதிகமாக இருக்கிறார்கள்.மேலும் நமது இந்தியன் கம்யூனிட்டியில் குடும்பங்களை எளிதில் பிரேக் செய்துவிடவும் முடியாது. நம்மவர்கள் குடும்பத்தோடு இருந்தே பழக்கப்பட்டவர்கள். குடும்பமாகவே வாழ்ந்து ஊரிப்போனவர்கள். குடும்பத்தில் நிகழ்கிற சடங்கு சம்பிரதாயங்கள், அம்மா, அப்பாவிற்குள் வரும் பிரச்சனைகள், அப்பா, அம்மாவை எப்படி நடத்துகிறார், பெண்களை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பது போன்ற நிகழ்வுகள் சுற்றிச்சுற்றி, ஐந்து வயதிற்குள் குழந்தைகள் மனதில் அப்படியே பதிந்து விடுகிறது.மும்பை பெண் ஷ்ரத்தா கொலை இதில் விதிவிலக்கு. அப்தார் கண்டிப்பாய் மனநலம் பாதித்த நோயாளியாக இருக்கவே வாய்ப்பு அதிகம். இவர்கள் பிரச்சனையின் வடிவத்தை உணராமல் ரெகுலர் வாழ்க்கையில் தாங்கள் இருப்பதாக தன்னையே ஏமாற்றி டாக்ஸிக்காக அவனை மாற்றும் சூழல் உருவாகியிருக்கிறது. உலகத்தில் சில எக்ஸ்ஷெப்ஷன்ஸ் எப்போதும் இருந்துகொண்டே இருப்பார்கள். இவர்களை நாம் இதிலிருந்து தள்ளிவைத்து விடலாம். லதா, எழுத்தாளர், சென்னை.பாதுகாப்பற்ற நிலை என்பதற்காக லிவ்-இன் ரிலேஷன்ஷிப் வாழ்க்கை முறையே முற்றிலும் தவறென சொல்லிவிட முடியாது. குடும்பமாய் இணைந்து நடத்தி வைக்கும் திருமணத்திலும் பாதுகாப்பற்ற தன்மை இருக்கவே செய்கிறது. இரண்டு திருமணத்திலும் அவர்கள் பிரச்னைக்குள் நாம் தலையிடவும் முடியாது. குடும்பமாக பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் கொடுக்கப்படும் பொறுப்பைவிட அதிகமான பொறுப்பும், முதிர்ச்சியும் லிவ்-இன் ரிலேஷன் வாழ்வுக்குத் தேவைப்படுகிறது. எல்லாவற்றையும் ஃபேஷனாக பார்ப்பதை போல இன்றைய இளம் தலைமுறை இதையும் பார்க்கிறார்கள்.தான் நம்பிய ஒருவன் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் என தெரிந்தவுடனே, பெண்கள் அதிலிருந்து வெளியில் வரவேண்டும். அதற்கான சிந்தனையும் தனித்துவமும் பெண்ணுக்கு எப்போதும் இருக்க வேண்டும். அப்படியாக சிந்திக்கும் பெண்களே இத்தகைய வாழ்வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விடுத்து அவனை சரிபண்ணி விடுவேன், திருத்தி விடுவேன் என்பதெல்லாம் வெட்டியான சிந்தனை. முயற்சி. டாக்ஸிக் ஆண்களுக்கு அடிக்கவும், உதைக்கவும் எப்போதும் ஒரு ஆள் தேவை. அவர்களின் உறவிலிருந்து ஒதுங்கி வாழவும் விடமாட்டார்கள். இதுதான் அன்பு, காதல், உரிமை என்றெல்லாம் டயலாக் விடுவார்கள். ஒருபடி மேலே சென்று அழுவது.. மன்னிப்புக் கேட்பது.. திரும்பவும் காலில் விழுவது என்றெல்லாம் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இதை நம்பிவிடும் பெண்கள் விட்டுக் கொடுத்துப் போவது, இன்னும் கொஞ்சநாள் பார்க்கலாம் என சிந்திப்பதே பிரச்னையின் தொடக்கமாக இருக்கிறது.இப்படியானஆண்களை விட்டுவிட்டு பெண்கள் தைரியமாக வெளியில் வரவேண்டும். சுயமரியாதையில் எங்கு அடித்தாலும் அவன் தேவையில்லை என முடிவெடுக்க வேண்டும். அதை விடுத்து மேலோட்டமாய் சிந்திப்பதுதான் பிரச்னைக்கு காரணமே. முற்போக்கு சிந்தனை, சுதந்திரம் என்கிற பெயரில் மேலோட்டமான பார்வையும் உணர்ச்சிவசப்படலுமே பெண்களுக்கு இருக்கிறது. குறிப்பாக பெண் என்பவள் யாரையாவது சார்ந்தே வாழ வேண்டும் என்கிற சிந்தனை பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆழமான சிந்தனை, விசாலமான பார்வை இருந்தால் பிரச்னைகள் தொடைக்க முடியாத துயரங்களாய் மாற வாய்ப்பில்லை. கன்யா பாபு, சமூக செயற்பாட்டாளர், சென்னை.நமது வாழ்வியல் முறையும், இன்றைய தலைமுறையும் நிறையவே மாறிவிட்டது. பெண்களுக்கான கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து இரவு பணிக்கென இப்போதுதான் பெண்கள் வந்திருக்கிறார்கள். அதுவுமே தனியாக பயணிப்பதில் பயத்தையும் கலவரத்தையும் பெண்களுக்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.முன்பெல்லாம் லிவ்-இன் வாழ்க்கை மோசம் என்றோம். அப்படி பேசும் கால கட்டத்தில் இப்போது நாமில்லை. நமக்கு லிவ்-இன் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் நமது குழந்தைகள் அதை தேர்வு செய்தால் நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது. வேண்டாம் இது கெட்டது எனச் சொல்லாமல், பாதுகாப்பாக இரு.. ஜாக்கிரதையாக இருவென, அந்த விஷயத்திற்கு நமது குழந்தைகளை எஜுகேட் செய்வதையே இனி நாம் யோசிக்க வேண்டும். நட்போடு அணுகி, முறையாக நாம் அவர்களை வழிநடத்தவில்லை என்றால், நம்மிடத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கான சுதந்திரத்தை, இடைவெளியை கொடுத்து, நட்போடு பழகி எஜுகேட் செய்தால், பெற்றோரிடம் சொல்லாமல் எதையும் நமது குழந்தைகள் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். கண்டிப்பு காட்டும் பெற்றோரிடத்தில் குழந்தைகள் ஒதுங்கவே செய்வார்கள். பாதிப்பை உண்டு பண்ணுபவர்களும், பாதிப்படைந்தவர்களும் நம்மைச் சார்ந்தவர்கள்தான். அவர்கள் ஒன்றும் வேற்றுலகவாசிகள் கிடையாது. நமது குடும்பங்களில் உருவாகி வெளியுலகை சந்திப்பவர்கள்தான் இவர்கள். இதில் முக்கியமான பங்கு பெற்றோருக்கே. கேட்டெட் கம்யூனிட்டியாய் தங்களின் பெற்றோரை பார்த்து வளரும் குழந்தைகள், பெண்களை அடிப்பதையும், திட்டுவதையும் தங்களின் ரைட்ஸாக எடுக்கிறார்கள். பெண்களை அடிக்காதே, அனுமதி இல்லாமல் தொடாதே, பெண்களை மதிக்க கற்றுக்கொள் போன்ற விஷயங்களை பெற்றோர் குழந்தைகள் முன்பு வாழ்ந்து காட்ட வேண்டும்.குழந்தை வளர்ப்பில் முதல் பொறுப்பு பெற்றோருக்கு என்றால், அடுத்த பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கே. மூன்றாவது அரசாங்கம். நான்காவது ஊடகங்கள். நால்வருக்குமே இதில் பங்குண்டு. இதில் எது தனது கடமையை சரிவரச் செய்யவில்லை என்றாலும் பாதிப்பு குழந்தைகளுக்கே. குதிரைப் பந்தயத்தில் ஜெயிக்கும் ஜாக்கிகளை மட்டுமே இன்றைய கல்வி முறை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. படிப்பைத் தாண்டி பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு எதையும் கற்பிப்பதில்லை. வாழ்க்கையின் நிதர்சனங்களை சந்திக்க பெற்றோரும், கல்வி முறையும், அரசாங்கமும் குழந்தைகளை தயார்படுத்தத் தவறினால், இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் நிலைமை இன்னும் மோசமடையவே செய்யும்.விஸ்மயா வழக்கில் அவரின் திருமணம் வீட்டில் பார்த்து செய்த திருமணம்தான். ‘அட்ஜெஸ்ட் செய்து போ’ என்பதால் அந்த பெண் இன்று உயிரோடு இல்லை. பிடித்தால் வாழு.. பிடிக்கலையா பரஸ்பரம் பேசி விலகிவிடு என்பதை புரிய வையுங்கள். நாங்கள் இருக்கிறோம் என பெற்றோர் நம்பிக்கை கொடுங்கள். ஆபத்தான வாழ்விலிருந்து விலகும் வாழ்வியல் பாடத்தை பெற்றோர் குழந்தைகளுக்கு கட்டாயம் சொல்லிக் கொடுங்கள்.தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

Related posts

பிரபாஸ் போல் வலுவாக… ஃபிட்னெஸ் டிப்ஸ்!

கண் கருவளையம் தடுக்கும் வழிகள்!

புதினா நீரின் நன்மைகள்!