பொங்கல் விடுமுறையையொட்டி ஆழியார் கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த கவியருவிக்கு, பொங்கல் விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணை அருகே, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவியில், மழை இருக்கும் காலங்களில் தண்ணீர் அதிகளவு வருவது மட்டுமின்றி, அருவியில் குளிக்க, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். இந்த மாதம் துவக்கத்தில் சில நாட்களாக பெய்த கன மழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை குறைவால், கவியருவியில் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இருப்பினும், அருவியில் கொட்டிய தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு சென்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பணிகள் அதிகம் வந்திருந்தனர். இதில் நேற்று சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். வழக்கத்தைவிட கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், கவியருவிக்கு குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் பலர் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

இருப்பினும் பலரும், வெகுநேரம் காத்திருந்து குளித்தனர். சில சுற்றுலா பயணிகள், அருவியின் ஒருபகுதியில் வழிந்தோடும் தண்ணீரிலும், குட்டைபோல் தேங்கியிருந்த தண்ணீரிலும் குளித்தனர்.காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதல் கவியருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. சுற்றுலா பயணிகள் விதிமீறி அடர்ந்த காட்டு பகுதிக்குள் செல்வதை தடுக்க வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related posts

அதானி குழுமம் மீது ஊழல் புகார் கூறிய ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு செபி நோட்டீஸ்

வினாத்தாள் கசிவு: ம.பி.யில் 10 ஆண்டு சிறை

கென்யாவில் அரசுக்கு எதிராக போராட்டம்: 39 பேர் பலி