விடுமுறை தினம் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

*குடும்பத்துடன் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்

வி.கே.புரம் விடுமுறை தினம் என்பதால் நேற்று பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு தலையணை, மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி உட்பட பல அருவிகள் உள்ளன. இதில் களக்காடு பகுதியில் உள்ள தலையணை அருவி மற்றும் மணிமுத்தாறு அருவியில் மழைக்காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். அதே போன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழுவது வழக்கம்.

ஆனால் பிரசித்தி பெற்ற அருவிகளில் ஒன்றாக விளங்கும் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து விட்டு செல்வது வழக்கம்.இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அகஸ்தியர் அருவியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது இருசக்கர வாகனங்கள், கார், வேன்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் தங்களது குழந்தைகளுடன் குடும்பம், குடும்பமாக உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை பாபநாசம் வன சோதனைச் சாவடியில் வனச்சரகர் குணசீலன் அறிவுறுத்தலின் படி வனத்துறையினர் சோதனைக்கு பின்னே அனுமதி அளித்தனர். அவர்களில் சிலர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்காத வண்ணம் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்