சுற்றுலாவின் மூலம் இந்தியாவுக்கு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கும்: அமைச்சர் லட்சுமி நாராயண் தகவல்

பெங்களூரு: உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது பன்முக தன்மை உடைய இந்தியாவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளன. இதை பயன்படுத்தி கொள்வதால் சுற்றுலாவின் மூலமாக அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறினார். பெங்களூரு, அரண்மனை மைதானம் திரிபுர வாசினியில் சர்வதேச டிராவல்ஸ் மார்ட் என்ற பெயரில் சுற்றுலா சார்ந்த கண்காட்சி , கருத்தரங்கு நேற்று தொடங்கியது.

புதுச்சேரி , சுற்றுலா துறை அமைச்சர் கே.லட்சுமிநாராயணன் இதை தொடங்கி வைத்து கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சுற்றுலா துறை ஸ்டால்களை பார்வையிட்டார். புதுச்சேரி அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டாலில் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூறியதாவது, ‘இந்தியாவில் சுற்றுலா ஸ்தலங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக உலக நாடுகளிலுள்ள பாரம்பரியம், கலாச்சாரம், பழம் பெருமை வாய்ந்த இடங்களை விட புதுச்சேரி, தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளன.

இந்தியாவிலுள்ள சிறப்பு மிக்க இடங்களை பார்ப்பதற்காக ஒரு கோடிக்கும் அதிகமான நபர்கள் வருகின்றனர். அவ்வாறு வருகிற நபர்களின் முதல் தேர்வு புதுச்சேரி என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு காரணம் புதுச்சேரியிலுள்ள கடற்கரை , தமிழ் மற்றும் பிரெஞ்ச் கட்டிட கலைகளுடன் காணப்படும் பாரம்பரிய கட்டிடங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளாகும். கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிதாக பல்வேறு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடற்கரை அருகே பெரிய அளவிலான கூடங்கள் , அதன் அருகே ஓட்டல்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவர்வதாக அமைந்துள்ளது. உலக அளவில் சுற்றுலா வளர்ச்சி அடைந்து வருகிறது. ஒரு மாநிலத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகளிடம் இந்தியாவிலுள்ள பிற பிரசித்தி பெற்ற இடங்களையும் காண செய்யும் வகையில் ஒரே இடத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவை பொருத்தவரை சரியான வகையில் ஒருங்கிணைப்பு இருந்தால் அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடையும். என்றார். புதுச்சேரி சுற்றுலாத் துறை செயலாளர் ஜெயந்த்குமார் , இயக்குநர் முரளிதரன் பேட்டியின் போது உடனிருந்தனர்.

Related posts

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!