மாமல்லபுரம் இசிஆர் சாலையில் கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்கள்: வாகன ஓட்டிகள் அச்சம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இசிஆர் சாலையில், கிழிந்து தொங்கும் விளம்பர பேனரால் விபத்து அபாயம் உள்ளது. இதனால், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மாமல்லபுரம் இசிஆர் சாலையில், ரிசார்ட் சார்பில் ராட்சத பேனர் வைக்கப்பட்டுள்ளது. அது, காற்றில் கிழிந்து தொங்குவதால் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் காணப்படுகிறது. பேனரை, தாங்கி நிற்கும் இரும்பு கம்பிகளும் வலுவிழந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. இந்த சாலையை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில் இருந்தபோது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக பராமரித்தனர்.

கடந்தாண்டு தேசிய நெடுஞ்சாலையாக மாறிய பிறகு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரிப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பல முறை உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டும் காணாதது போல் மெத்தனமாக உள்ளனர். எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு விபத்து ஏற்படுத்தும் நிலையில் கிழிந்து தொங்கும் பேனரை அகற்ற வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

மத்திய கிழக்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது

2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் கண்டெடுப்பு