தக்காளி…ஆதி முதல் அந்தம் வரை!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. அத்தகைய உணவைப் பக்குவமாக தயாரித்துக் கொடுக்கும் முறைக்குப் பெயர்தான் சமையல். இந்த சமையலில் சில பொருட்களைச் சேர்க்கலாம். சில பொருட்களைத் தவிர்க்கலாம். ஆனால் எல்லா விதமான சமையலுக்கும் சில பொருட்கள் கண்டிப்பாக தேவை என்றிருக்கும். அப்படி ஒரு பொருள்தான் தக்காளி. அரிசியைக் கொண்டு சோற்றை வடித்து விடலாம். அதற்கு சாம்பார், ரசம், புளிக்குழம்பு என எதைச் செய்ய வேண்டும் என்றாலும் நிச்சயமாக தக்காளியின் தயவு தேவை. மேலே சொன்ன இத்யாதிகளை விட்டு விட்டு வெறும் தக்காளியை வைத்தே சாப்பாடு செய்து விடலாம். இதற்குப் பெயர் தக்காளி சாதம் என உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டுமா? என்ன? இத்தகைய இன்றியமையா புகழ் கொண்ட தக்காளிக்கு வேறு சில புகழ்களும் இருக்கின்றன. அதைக் கொஞ்சம் பார்ப்போமா! ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பூர்வீகம் இருக்கும். அதன்படி நம்ம தக்காளியின் பூர்வீகம் எது தெரியுமா? தென் அமெரிக்கா நாட்டின் ஆண்டிஸ் பகுதிதான் தக்காளியின் பூர்வீகம். அங்குள்ள காட்டுப்பகுதிகளில் பெர்ரிகள் என்ற பெயரில் காட்டுச்செடியாகவே விளைந்திருக்கின்றன. குறிப்பாக புதரான பகுதிகளில் ஆங்காங்கு கூட்டம் கூட்டமாக செழித்து வளர்ந்திருக்கின்றன.

இதைச் சுவைத்துப் பார்த்த அப்பகுதி மக்கள் தங்கள் உணவில் சேர்த்து சமைக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக இன்றைய பெரு, பொலிவியா, சிலி மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளில் இந்தக் காட்டு பெர்ரிகள் அதிகளவில் விளைந்து மக்களின் பசியாற்ற உதவியுள்ளன. பின்னர் அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் இதை நிலத்தில் பயிரிட்டு பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. இந்த பெர்ரிகளை முதன்முதலில் ஆஸ்டெக்குகள் மற்றும் இன்காக் இனக்குழுவினர் கி.பி 700-ல் பயிர் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த ஆரம்பகால தக்காளிகள் சிறிய அளவில் புளிப்புச் சுவை கொண்டதாக இருந்திருக்கின்றன. இப்படி ஒரு கதையும் இருக்கிறது. சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேறு பகுதிகளில் வசித்த மக்கள் தென் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தபோது, ​​அவர்கள் இந்த சிறிய அளவிலான காட்டுத் தக்காளிகளைச் சாப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இதன் சுவை மிகப் பிடித்திருக்கிறது. பின்னர் ஆண்டிஸ் பகுதியில் இருந்து மத்திய அமெரிக்காவிற்குப் பயணித்த பயணிகள், பல்வேறு வகையான காட்டுத் தக்காளிச் செடிகளை அங்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து மாயன் இன மூதாதையர்கள் தக்காளியை நன்றாக விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள்.

தக்காளி சாகுபடி குறித்து உறுதியான தரவுகள் இல்லாததால் கி.மு. 500- ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தக்காளியின் பூர்வீகம் தென் அமெரிக்கா என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஐரோப்பாவிற்கு சில ஆய்வாளர்கள் கி.பி. 16-ம் நூற்றாண்டில் பயணம் மேற்கொண்டபோது அந்தப் பகுதிகளில் தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது என்று ஒரு தகவல் இருக்கிறது. அப்போது தெற்கு ஐரோப்பிய நாடுகளில் வசித்த மக்கள் தக்காளியை தங்கள் உணவுகளில் சேர்க்கத் தொடங்கி விட்டனர். ஆனால் அங்குள்ள வடக்கு பிராந்தியங்களில் தக்காளிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பிரிட்டன் மற்றும் அதன் வட அமெரிக்க காலனி நாடுகளில் தக்காளி அழகாக இருக்கிறது என சொல்லப்பட்டதே தவிர அதனை சாப்பாட்டுக்கு உகந்தது அல்ல என்றே கருதினர். இன்னும் சொல்லப்போனால் தக்காளி ஒரு விஷப்பொருள் என கருதப்பட்டது. இதனால் பல ஆண்டுகள் அங்கு தக்காளிக்கு தடை நீடித்தது. பின்னர் 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரிட்டனில் தக்காளி ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் தக்காளியின் சுவைக்கு அடிமையானதுடன், தக்காளி குறித்து பெருமையாக பேசத் தொடங்கி விட்டார்கள். அதன் விஷத்தன்மை குறித்த தவறான நம்பிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் நம்பிக்கை ஐரோப்பா முழுவதும் தக்காளிக்கு ஒரு மவுசை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனால் ஐரோப்பா முழுவதும் பல்வேறு உணவுகளில் தக்காளி சாம்ராஜ்யம் கோலோச்சியது. அமெரிக்கா, ஐரோப்பாவில் தக்காளி நுழைந்த கதையைத் தெரிந்துகொண்டோம். இந்தியாவுக்கு எப்போது வந்தது தெரியுமா? 16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கீசிய ஆய்வாளர்கள் இந்தியாவுக்கு வந்ததன் மூலம் தக்காளி இங்கு வந்திருக்கிறது. இந்தியாவிலும் தக்காளிக்கு ஏகபோக மரியாதை. இதனால் இங்கு அதிகளவில் தக்காளி பயிர் செய்யப்பட்டு நுகரப்பட்டது. தக்காளி பொதுவாக சற்று வெப்பமான சூழலில் செழித்து வளரும் என்பதால், இந்திய மண்ணுக்கு நன்கு பொருந்தியது. இதனால் சீனாவைத் தொடர்ந்து உலகளவில் தக்காளி உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளராக இந்தியா மாறியது. தொடக்க காலத்தில் உத்தரகாண்டில் காட்டுத் தக்காளி விளைந்தது. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில்தான் தக்காளி முறையாக சாகுபடி செய்யப்பட்டு, பிரபலம் அடையத் தொடங்கியது. டெஹ்ராடூனில் 1815-1830 காலகட்டத்தில் தக்காளி பயிரிடப்பட்டது. படிப்படியாக நைனிடால், பவுரி, லேண்ட் டவுன் மற்றும் ராணிகேத் போன்ற பகுதிகளுக்கு தக்காளி சாகுபடி விரிவடைந்தது. 20-ம் நூற்றாண்டின் இறுதியில் தக்காளி உத்தரகாண்டில் ஒரு முக்கிய வணிகப் பயிராக மாறியது.

உத்தரகாண்டின் 13 மாவட்டங்களில் தக்காளி உற்பத்தியில் முன்னணியில் உள்ள நைனிடால் தக்காளி பெல்ட் அழைக்கப்பட்டது. அதிலும் நைனிடாலில் பிளாக் ஹல்த்வானி பகுதி தக்காளி உற்பத்தியில் முக்கிய இடத்தை வகித்தது. அதைத் தொடர்ந்து ராம்நகர் தொகுதியிலும் தக்காளி அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து யுஎஸ் நகர், குறிப்பாக சிதர்கஞ்ச் மற்றும் ருத்ராபூர் பகுதிகளும் தக்காளிக்கு பெயர்போன இடங்களாக மாறின. காதிமா, கதர்பூர், பாஸ்பூர், காஷிபூர் மற்றும் ஜஸ்பூர் போன்ற பிற பகுதிகளிலும் தக்காளி உற்பத்தி அதிகரித்து வருகிறது.இப்படித்தான் தென் அமெரிக்காவில் உருவான தக்காளி இப்போது பல கண்டங்கள் தாண்டி உலகம் முழுவதும் ஒரு முக்கிய சமையல் பொருளாக மாறி நிற்கிறது. இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் தக்காளியை காதல் ஆப்பிள், சொர்க்கத்தின் ஆப்பிள் என்று உயர்வாக குறிப்பிடுகிறார்கள். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தக்காளி ஆரோக்கியமற்றதாகவும் விஷமாகவும் கருதப்பட்ட நிலையில் சில ஏழை மக்கள் இதை தாராளமாக சாப்பிட்டனர். அவர்கள் எந்த ஆரோக்கியக்குறைவும் இன்றி நன்றாக வாழ்ந்ததால் அந்த கருத்து காலாவதியானது. 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தக்காளி குறித்த தவறான கருத்து முற்றிலும் மாறியது. 1897-ம் ஆண்டில் ஜோசப் காம்ப்பெல் என்பவர் தக்காளியில் சூப் தயாரித்தபோது, தக்காளி சூப் பிரபலம் அடைந்தது. இப்போது சூப் மட்டுமின்றி வெஜ் சாலட், சாட் அயிட்டம்ஸ் என பலவற்றிலும் தக்காளி நீக்கமற நிறைந்திருக்கிறது.

Related posts

குரங்கு அம்மை நோய்த்தொற்று தமிழகத்திற்குள் பரவுவதை தடுக்க நடவடிக்கை தேவை: டிடிவி

அரசு நிர்வாகத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்படுகிறார் கமலா: கருத்துக் கணிப்பில் டிரம்பை பின்னுக்குத் தள்ளினார் கமலா ஹாரிஸ்!!