கட்டணக்கொள்ளை மட்டுமே இலக்கு 70% சுங்கச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் இல்லை: விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை

சேலம்: தமிழ்நாட்டில் இயங்கும் 70 சதவீத சுங்கச்சாவடிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. கட்டணக்கொள்ளையை மட்டுமே இலக்காக கொண்டு அவை இயங்கி வருகிறது என்று சாலைமேம்பாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் விரைவான பயணத்திற்காக இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலைகள் இதற்கு துணை நிற்கும் நிலையில், அவற்றில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள்தான், வாகன உரிமையாளர்களுக்கும், பயணிகளுக்கும் பெரும் சிரமமாக மாறி வருகிறது. இந்தியாவில் 29,666 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 566 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் 5,400 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகள் வழியாக தினமும் 65 லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. இவற்றின் மூலம் தினமும் ரூ.100 கோடிக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகள் அனைத்திலும் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்திக் கொள்ள ஒன்றிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி ஆண்டு தோறும் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நடப்பாண்டு ஏப்ரல் 1ம்தேதி சுங்கக்கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஒன்றிய சாலை போக்குவரத்து ஆணையம் கட்டண உயர்வை நிறுத்தி வைத்தது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் 7கட்டமாக முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்படுகிறது. இதையடுத்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது.

தமிழகத்தில் மட்டும் 64 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 வரை தற்போதுள்ள கட்டணத்தில் இருந்து உயர்ந்துள்ளது. மாதாந்திர பாஸ் கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி கட்டணம் வசூலித்தாலும் வாகனங்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உரிய அடிப்படை வசதிகளை, சுங்கச்சாவடி நிர்வாகங்கள் செய்து ெகாடுக்கிறதா? என்றால் அதற்கான விடை கேள்விக்குறியாகவே உள்ளது. சுங்கச்சாவடிகளின் நிலைகள் குறித்து தன்னார்வ அமைப்புகள், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் 70 சதவீத சுங்கச்சாவடிகளில் போதிய வசதியில்லை. பெரும்பாலான சுங்கச்சாவடிகள் விதிகளுக்கு புறம்பாகவே செயல்பட்டு வருகிறது என்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து சாலைமேம்பாடு சார்ந்த தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: இந்திய சுங்கச்சாவடிகள் சட்டத்தின்படி வாகன ஓட்டிகளுக்கும், பயணிகளுக்கும் பாதுகாக்கப்பட்ட, தரமான குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

முதலுதவிகள் அளிப்பதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய முதலுதவி பெட்டிகள் வைத்திருக்க வேண்டும். சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ் கட்டாயம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் தாமதம் இன்றியும், இடையூறு இல்லாமலும் செல்வதற்கு பிரத்ேயக வழி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பாதசாரிகளும், இருசக்கர வாகனங்களும் செல்ல பிரத்யேக வழி, சுங்ககட்டணம் பற்றிய அறிவிப்பு பலகை, சுங்கச்சாவடி பெயர் பலகை, அடுத்த சுங்கச்சாவடி விவரம், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் ஓய்வெடுப்பதற்கான அறைகள் கட்டாயம் என்று பல்வேறு விதிமுறைகள் சுங்கச்சாவடி சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் 70 சதவீத சுங்கச்சாவடிகளில் இவை முழுமையாக பின்பற்றப்படவில்லை. உதாரணமாக கோவையில் இருந்து சேலம் வழியாக சென்னைக்கு பத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல வேண்டும். இவற்றில் ஆண்டு ேதாறும் சுங்கக்கட்டணம் உயர்தப்படுகிறது. ஆனால் எதிலும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. சேலம்-உளுந்தூர்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லும் பகுதி சுங்கச்சாவடிகளில் கழிப்பிட வசதி படுமோசமாக உள்ளது. இதனால் பெண்களும், மாற்றுத்திறனாளிகளும் மிகவும் அவதிப்படுகின்றனர். நான்குவழிச்சாலையான இந்த பகுதியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் 2வழிச்சாலைகள் திடீரென வருகிறது. இதனால் கோர விபத்துகள் பெருகி வருகிறது. இதேபோன்ற நிலையில் தான் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் உள்ளன. எனவே இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆய்வாளர்கள் கூறினர்.

 

Related posts

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது