முன்னணி வீரர்கள் ஆஸி திரும்பிய நிலையில் இன்று 4வது டி20 ஆட்டம்

ராய்பூர்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 5 ஆட்டங்களை கொண்ட டி20 தொடர் நடக்கிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2வது ஆட்டத்தில் 44ரன் வித்தியாசத்திலும் சூரியகுமார் தலைமையிலான இந்தியா வெற்றிப் பெற்றது. தொடர்ந்து கவுகாத்தியில் நடந்த 3வது ஆட்டத்தில் மேத்யூ வேடு தலைமையில் ஆஸி 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 4வது டி20 ஆட்டம் இன்று ராய்பூரில் நடைபெற உள்ளது.

இந்த ஆட்டத்தில் வென்று, தொடரை வசப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொள்ளும். அதற்கேற்ப இந்தியாவின் இளம் வீரர்கள் பேட்டிங்கிலும் சரி, பந்து வீச்சிலும் சரி அபார திறமையடன் செயல்பட்டு வருகின்றனர். முதல் 2 ஆட்டங்களில் 209, 235ரன் குவித்த இந்தியா, தோற்றுப்போன 3வது ஆட்டத்திலும் 222ரன் குவித்தது. ஆஸியும் தோற்ற ஆட்டங்களிலும் 208, 191ரன்களும், வெற்றிப் பெற்ற ஆட்டத்தில் 225 என அபாரமாக ரன் குவித்து உள்ளது. ஆக 2 அணிகளும் சமபலத்தில் இருக்கும் நிலையில் 3வது ஆட்டத்தின் வெற்றிக்கு காரணமான ஆஸி அதிரடி மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்லீஸ், சீன் அபோட், மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆகியோர் நாடு திரும்பி விட்டனர்.

இவர்கள் உலக கோப்பையில் விளையாடியவர்கள். ஏற்கனவே முக்கிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், ஆடம் ஸம்பா ஆகியோர் 2வது ஆட்டத்துடன் ஊருக்கு போய்விட்னர். அவர்களுக்கு பதில் கிறிஸ் கிரீன், பென் துவார்ஷஸ், ஜோஷ் பிலிப், பென் மெக்டர்மார்ட் ஆகியோர் களம் காண உள்ளனர். அது இந்திய அணிக்கு சாதகாக இல்லாவிட்டாலும், ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு திரும்புவது நடுவரிசையில் பலமான அம்சமாக அமையும். கூடவே தீபக் சாகர், புது மாப்பிள்ளை முகேஷ் குமார் ஆகியோரும் இன்று களம் காண வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றங்கள் இந்தியாவுக்கு 3வது வெற்றியாக மாறினால், டி20 தொடரை இந்தியா கைப்பற்றும். இல்லாவிட்டால் 2வது வெற்றியை பெறும் ஆஸி தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தக்க வைக்கும்.

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை